சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––



சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கல்லுாரி சாலையில், சாலையோர இயற்கை உணவகம் நடத்தி வரும், 25 வயதான தென்றல்:

எனக்கு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று ஆசை. எம்.பி.ஏ., படித்து முடித்ததும், காரைக்குடியில் ஒரு சைக்கிள், ‘ஷோரூமில்’ வேலை பார்த்தபடியே, என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தேன். குறைவான முதலீட்டில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, சில ஆரோக்கிய உணவு வகைகளை தயார் செய்து, சாலையோரம் கடை போட்டு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

நண்பர்கள், உறவினர்கள் அனைவரும், ‘எம்.பி.ஏ., படித்து விட்டு, சாலையில் கடை வைக்கலாமா?’ என்று கேட்டனர். ஆனால், கணவரும், என் குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர்.

காலை 6:00 மணிக்கு தேங்காய் பால், வெண்பூசணி, கேரட் சாறு, பீட்ரூட் சாறு, நெல்லிக்காய் சாறு, வாழைத்தண்டு சாறு, பாசிப்பயறு, கொள்ளு சுண்டல் என விற்பனை செய்து வருகிறேன். காரைக்குடி மாநகராட்சிக்கு தினமும், 50 ரூபாய் செலுத்தி விடுவதால், காவல் துறையினரின் முறையான ஒத்துழைப்பும் கிடைக்கிறது.

லாப நோக்கம் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறேன். இந்த கடைக்கு நான் செய்த முதலீடு 5,000 ரூபாய் தான். சில பாத்திரங்கள், ‘பார்சல் கப்’ உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் தான் வாங்கினேன். அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து எல்லாவற்றையும் தயார் செய்து, எடுத்து வருகிறேன்.

ஆரம்பித்த புதிதில் பெரிதாக வியாபாரம் இல்லை. சோர்வடைய ஆரம்பித்த போது, நடைபயிற்சிக்கு வரும் சிலர், என் கடை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதன்பின், மக்கள் மத்தியில் என் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘எசன்ஸ்’ எனப்படும், உணவின் சுவை, மணத்திற்காக சேர்க்கப்படும் செறிவூட்டப்பட்ட திரவம் மற்றும் நிறமூட்டிகள் எதுவும் பயன்படுத்துவதில்லை. உற்பத்தி செலவுடன், குறைவான லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறேன்.

இப்போதைக்கு எல்லா செலவும் போக மாதம், 22,500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. என்னை பொறுத்தவரை இது ஓரளவுக்கு நிறைவான லாபம் தான். மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு தொழில் செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைப்பதை தான் பெரிதாக நினைக்கிறேன்.

இது தவிர சத்துமாவு, சிறுதானிய சத்துமாவு, பீட்ரூட் பொடி என சில தயாரிப்புகளை, ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்கிறேன். இதன் வாயிலாக, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த இரு தொழில்களையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்காக, வங்கி கடன் கிடைத்தால் பெரிய உதவியாக இருக்கும். இந்த கடை என் உழைப்புக்கும், நம்பிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம்.

***

தொடர்புக்கு: 89255 41015

***

Advertisement