நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; கொச்சியில் அவசர தரையிறக்கம்!

2


-நமது நிருபர்-




கொச்சியிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், இன்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக மீண்டும் கொச்சியில் தரையிறக்கப்பட்டது.

கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து அபுதாபி நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 50 நிமிடங்கள் ஆன நிலையில், 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

விமானத்தின் முதலாவது இன்ஜினில் ஆயில் அளவு மற்றும் அழுத்தம் மிக வேகமாகத் குறைந்து, ஆபத்தான நிலையை எட்டியது. நிலைமையைக் கணித்த விமானிகள் உடனடியாக அபுதாபி செல்லும் பயணத்தை ரத்து செய்துவிட்டு, கொச்சிக்கே திரும்ப முடிவு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட அந்த இன்ஜினின் செயல்பாடுகளையும் நடுவானிலேயே நிறுத்தினர்.

அவசரமாக தரையிறக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். உடனடியாக முழுவீச்சில் விமானம் தரையிறக்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஒரே ஒரு இன்ஜினை கொண்டு இயக்கப்பட்ட அந்த போயிங் 737 விமானம், கொச்சி விமான நிலையத்தில் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அவசர தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, அனைத்துப் பயணிகளுக்கும் அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement