பீம் அமைக்க கான்கிரீட் போடுவதில் தரத்தை உறுதி செய்யுங்கள்!

புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு பாகத்திலும் உரிய முறையில் கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உரிமையாளர்கள் கவனிக்க வேண்டும். கட்டுமான பணிகளை ஒப்பந்த முறையில் பொறியாளரிடம் ஒப்படைத்தாலும், கான்கிரீட் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கட்டடத்தில், அஸ்திவாரம், துாண்கள், பீம் ஆகிய பாகங்களுக்கான கட்டுமான பணியில் கம்பி கூடுகள் முறையாக அமைக்க வேண்டும். அதை சுற்றி கான்கிரீட்டை வழிந்து வெளியேறாமல் இருப்பதற்காக உரிய தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

இதில், அஸ்திவார நிலையில், தடுப்புகள் அமைப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதிக ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கும் போது, அதில் கம்பி கூடுகளை நிறுத்துவதிலும், கான்கிரீட் கலவையை கொட்டுவதிலும் பொறியாளர்கள் துல்லியமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக, கட்டடத்தில், பிளிந்த் லெவர், சில் லெவல் என பீம்கள் அமைத்து, துாண்களை இணைக்க வேண்டும். இவ்வாறு பீம்கள் அமைக்கும் போது கம்பி கூடுகளை முறையாக வைத்து, அதில் கான்கிரீட் கொட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இதில், உங்கள் கட்டடத்தில் பீம்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். அடுத்து, வரைபடத்திலும், கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதலில், பீம்களின் அளவு விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

குறிப்பாக, பீம்களின் அளவுகள் அடிப்படையில், அதில் கான்கிரீட் கலவையை தாங்கும் பலகைகளை அமைக்க வேண்டும். இதில் கம்பி கூடுகளை சுற்றி பலகைகளை அமைக்கும் போது, அதில் கொட்டப்படும் கான்கிரீட் கலவையின் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

கான்கிரீட் கலவையை கொட்டும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக, தடுப்பு பலகைகள் விரிவடைய அல்லது, கசிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பீம்கள் அமைக்கும் போது தாங்கு பலகைகளின் அமைப்பு உரிய இறுக்கத்துடன் சரியாக அமைய வேண்டும்.

இதில் தாங்கு பலகைகள் விரிவடையாமல், வளையாமல் இருந்தால் மட்டுமே, பீம்களின் அளவுகள் துல்லியமாக இருக்கும். குறிப்பாக, பீம்கள் அமைக்கும் போது, அதில் என்ன வகை கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்பதுடன் கான்கிரீட் தரம் சரியாக இருக்க வேண்டும்.

இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை அடிப்படையில், எம்20 வகை கான்கிரீட்டை பயன்படுத்த வேண்டும். இதில் கான்கிரீட் கலவை தயாரிப்பு போன்ற விஷயங்களிலும் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.

பீம்களுக்கான கான்கிரீட் கலவையை கொட்டும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக, தடுப்பு பலகைகள் விரிவடைய அல்லது, கசிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement