வந்து விட்டது வாடை வராத பெயின்ட்
நாங்கள் கட்டிவரும் வீட்டின் தரைத்தளத்தில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்கின்றன. காம்பவுண்டு சுவரில் உள்ள சிமென்ட் பூச்சுகளும் சேதமடைந்துள்ளன. என்ன காரணம்?
-தனசேகரன்,
செல்வபுரம்.
நீர் கசிவு மேலாண்மை சரியாக இல்லாததே காரணம். பேஸ்மென்ட் பகுதி எப்போதும் மண்ணுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால், நிலத்தடி ஈரப்பதம் மற்றும் மழைநீர் சுவர்களுக்குள் ஊடுருவும் வாய்ப்பு அதிகம்.
கட்டுமானத்தின் போது சரியான 'வாட்டர் புரூபிங்' செய்யப்படாதது, அடித்தள வடிகால் வசதி இல்லாதது, சுவர்களின் வெளிப்புறத்தில் ஈரத்தடுப்பு பூச்சு செய்யப்படாதது போன்ற காரணங்களால் சிமென்ட் பூச்சுகள் உதிரத் தொடங்கும்.
அதேபோல், காம்பவுண்ட் சுவர்களும் தொடர்ந்து மழைநீர், நில ஈரப்பதம் மற்றும் நீர் தேக்கம் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது, பூச்சுகள் வெடித்து உதிர்வதும், சுண்ணாம்பு படிவம் தோன்றுவதும் இயல்பாகும். இப்பிரச்னையைத் தீர்க்க, முதலில் நீர் எங்கிருந்து கசிகிறது என்பதை கண்டறிந்து தடுக்க வேண்டும்.
அதன்பிறகு சேதமடைந்த பூச்சுகளை அகற்றி, பொருத்தமான வாட்டர் புரூபிங் சிகிச்சை செய்து புதிய சிமென்ட் பூச்சு செய்ய வேண்டும்.
மழைநீர் தேங்காத வகையில் சரியான சாய்வு மற்றும் வடிகால் அமைப்பை ஏற்படுத்தினால், இதுபோன்ற பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு தவிர்க்க முடியும்.
நாங்கள் 15 வருட கட்டடத்தை வாங்க உள்ளோம். அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
-சுந்தரம், கணபதி.
பழைய கட்டடத்தை வாங்கும்முன் துாண், பீம் போன்றவற்றில் பிளவு உள்ளதா என்பதை பாருங்கள். தரைச்சாய்வு சுவர், அடித்தள பிரச்னையை கவனிக்க வேண்டும். சுவர் மற்றும் கூரையில் ஈரப்பதம் பூஞ்சை நீர்க்கசிவு உள்ளதா என பார்க்க வேண்டும். மின் ஒயரிங் பழையதா, பாதுகாப்பானதா என சோதிப்பது அவசியம்.
குழாய்களில் கசிவு உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். கூரையில் கசிவு அல்லது உடைப்பு உள்ளதா என பாருங்கள். கட்டடத்தில் பயன்படுத்திய சிமென்ட், இரும்பு போன்றவற்றின் தரம் பற்றி அறிய வேண்டும். தேவையான அனுமதிகள் பெறப்பட்டு உள்ளனவா என்று சரி பார்க்க வேண்டும். முக்கியமாக, ஒரு சிவில் இன்ஜினியர் அல்லது ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரை அழைத்து முழுமையாக ஆய்வு செய்த பின் முடிவு செய்வது நல்லது.
வீட்டு அறைகளுக்கு பெயின்ட் அடித்து அந்த வாசனை போவதற்கு ஒரு வாரம் ஆகிறது. வாடை வராத பெயின்ட் சந்தையில் கிடைக்குமா?
-ராஜேஷ், புத்துார்.
தற்போது வெளிச்சந்தையில் பெயின்ட் வாடையே வராத 'ஏக்டிவேடெட் கார்பன் டெக்னாலஜி' பெயின்ட்கள் கிடைக்கின்றன. பொறியாளரின் தக்க வழிகாட்டுதல்களுடன் அடிக்க வேண்டும்.
மழைநீரை சேகரிக்கும் வழிமுறைகள் என்ன? அதன் கட்டுமான அளவீடு குறித்து விளக்கினால் உதவியாக இருக்கும்.
-பூர்ணராஜ்,
நீலிக்கோணாம்பாளையம்.
மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைக்க சில அடி ஆழம் மட்டுமே தோண்டுகிறார்கள். ஆனால், அதன் ஆழம் 21 அடி வரை இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஒரு சிறிய கிணறு போல செயல்படும் வகையில் இருப்பது அவசியம்.
அதாவது 3 அடி அகலம் கொண்டதாக மேல் மட்டம் இருக்க வேண்டும். அதே அளவில் 9 அடி ஆழம், 3 அடி அகலம் இருக்கும்படியே குழி தோண்டி வர வேண்டும்.
அதற்கு மேல் இந்த குழியின் நடுவில் முக்கால் அடி அகல குழிதோண்டும் இயந்திரம் கொண்டு மீதமுள்ள 12 அடி ஆழத்திற்கு சீராக குழி தோண்டி கிணறு உறைகள் இறக்க வேண்டும்.
21 அடி நீளமும், முக்கால் அடி அகலமும் கொண்ட பிளாஸ்டிக் குழாய் அடி ஆழம் வரை கொண்டு செல்லப்பட்டு, அதன் மேல்பகுதி மழைநீர் சேகரிப்பு அமைப்பின் மேல் மட்டத்தில் கொண்டுவந்து நிறுத்தப்படும். அதன் மீது மூடி அமைத்துக்கொள்ளலாம்.
மணிகண்டன்
செயலாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).
மேலும்
-
மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!’ ––––––––––––––
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு