கேரளாவில் பருவ மழை குறைவால் வறட்சி அபாயம்

மூணாறு, செப்.6-

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை குறைவால் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது.

இம்மாநிலத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை நன்கு கை கொடுக்கும் என்பதால் முடிந்தவரை வறட்சி பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் மழை குறையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரையிலான கால அளவில் 22 சதவீதம் குறைவு என தெரியவந்தது. இதே கால அளவில் 2024,2025 ஆண்டுகளில் 13 சதவீதம் குறைவாகும். பருவ மழை குறைவால் மாநிலத்தில் வறட்சி அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வறட்சி அவசர நிலை இல்லை என்றபோதும், மழை குறையும் பட்சத்தில் அவசர நிலையை அமல் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தவிர நாட்டில் செப்டம்பரில் சராசரி மழை தொடர்பாக நீண்ட காலத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு 9 சதவீதம் மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்தது. அதனை கணக்கிட்டு மாநிலத்தில் வறட்சி அபாயம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அவசரகால செயல்பாட்டு மையம் அணைகளில் நீர்மட்டம், நீர்நிலைகளில் நீர் இருப்பு, வெப்பநிலை ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அவசரகால சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மழை குறைவு மூலம் 300 முதல் 500 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் 15 முதல் 30 நிமிடம் வரை மின் வெட்டை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது.

Advertisement