விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள்; வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, இந்தாண்டு வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோவில்கள் மற்றும் வீதிகளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர், 3 அல்லது 5 நாட்கள் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்; வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
* களி மண்ணால் செய்யப்பட்டது மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது.
* சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தப்படலாம்.
* ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும்பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
* சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
* சிலைகளை அழகு படுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வரும் 9ல் த.வெ.க., கூட்டணி கூட்டம்: காங்கிரஸ் - வி.சி.க.,வுக்கு அழைப்பு
-
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி உறுதி
-
ஐசிஐசிஐயின் 10% பங்குகள் எல்ஐசி வாங்க அனுமதி
-
நாட்டின் வளர்ச்சி பயணத்திற்கு 'தினமலர்' ஒரு சாட்சி; பிரதமர் மோடி புகழாரம்
-
இரண்டு லட்சம் பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி
-
'சம்பளம் இல்லா' கூடுதல் வேலை உலகிலேயே இந்தியா முதலிடம்!