வடக்கில் பிரபலமாகும் விஜய்!

பார்லிமென்டில் பல நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து கட்சிளைக் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வுகளின்போது தாங்கள் சேகரித்த விபரங்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை, பார்லி., செயலக அதிகாரிகள் உதவியுடன், எம்.பி.,க்கள் முழுமையாகத் தொகுத்து, அறிக்கையாக பார்லிமென்டில் தாக்கல் செய்வார்கள்.

இந்த நிலைக்குழு தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை அளித்துள்ளார். 'மாநிலங்களுக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட முதல்வர்களை சந்தித்து மாநில வளர்ச்சி, தேவைகள் என, பல விஷயங்களை விவாதியுங்கள்; அப்போதுதான் மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தெரியவரும். அதை வைத்து பார்லி.,யில் பேசலாம். தமிழகம் செல்வோர், முதல்வர் விஜயை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். ஏனெனில், கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து, நிலைக்குழுவில் உள்ள மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா எம்.பி.,க்கள் முதல்வர் விஜயை சந்திக்க ஆவலாக உள்ளனர்; ஒரு சில நிலைக்குழு எம்.பி.,க்கள் முதல்வரை சந்தித்துவிட்டனராம்.

விஜய் குறித்து காணொளிகளை வடமாநிலங்களில் பலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அடுத்து, இப்போது வடமாநிலங்களில் பிரபலமாக இருப்பவர், முதல்வர் விஜய்தான். 'இதனால்தான் அடுத்த பிரதமர் விஜய்' என த.வெ.க.,வினர் கூறி வருகின்றனர்.


களைகட்டும் நவராத்திரி விழா!

மே.வங்கத்தில் நவராத்திரி திருவிழா, துர்கா பூஜை என்ற பெயரில், மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் அந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவி வழிபாடே, முதன்மை வழிபாடாக மாறுகிறது.

ஒவ்வொரு தெருவிலும், தற்காலிகமாக, தத்ரூபமான கலை நயத்துடன் கூடிய மாபெரும் பந்தல்கள் அமைக்கப்படும். உலக அதிசயங்களின் வடிவங்கள் அல்லது நடப்பு சமூகக் கருத்துக்களை மையமாகக் கொண்டு, இந்த பந்தல்கள் வடிவமைக்கப்படும். இங்கு களிமண்ணால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான துர்கா தேவி, அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிப்பார்.

மே. வங்கத்தில் கிட்டத்தட்ட, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியை தோற்கடித்து, பா.ஜ.,வின் வெற்றிக்கு காரணமானவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பா.ஜ., ஆட்சி அமைத்த பின், ஐந்து முறை மேற்கு வங்கம் சென்றுள்ளார். இவருடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார், முதல்வர் சுவேந்து அதிகாரி

பா.ஜ., ஆட்சி அமைத்த பின், முதன் முறையாக வரும் துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் சுவேந்து அதிகாரி. பிரமாண்ட பந்தல் அமைத்து பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அழைக்க முடிவெடுத்துள்ளார்; இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அடிக்கடி மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கு சென்று, மக்களின் தேவைகளை தெரிந்து, அதற்கேற்றார் போல் செயல்பட வேண்டும் என்பது மோடியின் அறிவுரை!


பிரச்னையில் யோகி ஆதித்யநாத்!

உ.பி.,யில் யோதி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி, -மார்ச்சில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு முறை முதல்வராக இருந்த யோகி, மூன்றாவது முறையாகவும் வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., களத்தில் இறங்கி தேர்தல் வேலைகளை எப்போதோ துவங்கிவிட்டன. ஆனால், பா.ஜ., அமைச்சர்கள் யோகி மீது கடுப்பில் உள்ளனர்.

இதற்கு காரணம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தான். இந்த அதிகாரிகள், முதல்வர் யோகி சொல்வதைத்தான் கேட்கின்றனர்; துறை அமைச்சர்களை கண்டுகொள்வதே இல்லை என, அமைச்சர்கள் கோபத்தில் உள்ளனர்.

துணை முதல்வர் பிரிஜேஷ் பதக், மருத்துவ துறையின் அமைச்சராக உள்ளார். இவருக்கு தெரியாமல் பல மருத்துவர்களை இடமாற்றம் செய்துள்ளார், இந்த துறையின் மூத்த அதிகாரி. இது குறித்து அந்த அதிகாரிக்கு கண்டன கடிதம் எழுதியுள்ளார், பதக்; ஆனால், அந்த மூத்த அதிகாரியோ கடிதத்தை கண்டுகொள்ளவேயில்லை.

துணை முதல்வர் மட்டுமல்லாமல், பல அமைச்சர்களும் இப்படி அவர்களுடைய துறையின் செயலர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில், பஞ்சாயத் ராஜ் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், 'என் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை; அவர்களை மாற்றுங்கள்' என, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிகாரிகளா, அமைச்சர்களா யாருக்கு ஆதரவு அளிப்பது என, குழப்பத்தில் உள்ளார் யோகி.

இன்னொரு பக்கம், இந்த அமைச்சர்கள் எழுதிய கடிதங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, உ.பி., அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துக் கொண்டிருக்கின்றன.


மாற்றங்கள் பா.ஜ.,வை காப்பாற்றுமா?

ஒரு பக்கம் யோகிக்கு பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், பா.ஜ., தலைமைக்கும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

'அயோத்தியில் கோவில் கட்டுவோம்' என்கிற கோஷத்தை முன்வைத்து, ஆட்சியைப் பிடித்த பா.ஜ., இப்போது இதே விவகாரத்தில் சிக்கி தவிக்கிறது.

அயோத்தி ராமர் கோவிலை நிர்வகிப்பது, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை. இதன் நிர்வாகிகள், உண்டியல் திருட்டு விஷயத்தில் சரியாக செயல்படவில்லை என்பதால், அனைவரும் பதவி விலகினர். இதையடுத்து, இந்த அறக்கட்டளை முறையாக செயல்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பப்பட்டார். அத்துடன், ராணுவத்திலிருந்து ஒருவர் கோவிலின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும், மோடி ஆசைப்பட்டாரம்.

இதனால், நம் விமானப்படையின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரியான, ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா அறக்கட்டளையின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறக்கட்டளையின் பொது செயலர், பொருளாளர் மற்றும் அறங்காவலர்கள் என, அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் உண்டியல் திருட்டு விஷயத்தை மக்கள் மறந்துவிடுவர் என, பா.ஜ., தலைமை நினைக்கிறது. ஆனால், காங்., சமாஜ்வாதி என எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை முக்கிய தேர்தல் பிரசாரமாக்க திட்டமிட்டு உள்ளனர். பா.ஜ., வெற்றிக்கு காரணமான அயோத்தி ராமர், தோல்விக்கும் வழிவகுப்பாரா?


கருத்துக்கள் சொல்ல: ndussh@dinamalar.in

Advertisement