கூட்டணியில் காங்கிரசை அடுத்து கம்யூ., கட்சியினரும்... குழப்பப் பேச்சு! : எரிச்சல் காட்டத் துவங்கும் த.வெ.க., உறுப்பினர்கள்

3

சென்னை:த.வெ.க., கூட்டணியில், காங்கிரசை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினரும், குழப்பத்தை
ஏற்படுத்தும் வகையில் பேசத் தொடங்கி உள்ளனர். இது, த.வெ.க., உறுப்பினர்களிடம்
எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எதிராக அவர்கள்

எதிர்வினையாற்றத் தொடங்கி உள்ளனர்.


தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில், தமிழக வெற்றி கழக ஆட்சி நடந்து வருகிறது.

சட்டசபையில் த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



இவற்றில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, மற்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன. கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், விஜயை, 'வருங்கால பிரதமர்' என, த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் அழைக்கத் தொடங்கி உள்ளனர்.

விரும்பவில்லை



காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக, அக்கட்சியின் ராகுல் கருதப்படும் நிலையில், தங்கள் ஆதரவில் ஆட்சியை நடத்தும் முதல்வர் விஜயை, 'பிரதமர் வேட்பாளர்' என த.வெ.க.,வினர் அழைப்பதை, காங்கிரசார் விரும்பவில்லை.இது, இரு கட்சியினரிடமும் கசப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, 'பிரதமர் வேட்பாளராக ராகுலை, த.வெ.க., ஏற்காவிட்டால், தமிழக அமைச்சரவையில் இருக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்வோம்' என, காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்தார்.



இது, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசினார். காங்., - த.வெ.க., பிரச்னை முடியாத நிலையில், கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பேசத் தொடங்கி உள்ளனர்.



இந்திய கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., தமிழக செயலர் சண்முகம் ஆகியோர், சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, 'தமிழக அரசு நல்ல ஆட்சி மற்றும் நல்ல திட்டங்களை மக்களுக்கு தந்தால் ஆதரிப்போம்; இல்லையென்றால் எதிர்ப்போம். இதில், எந்த சமரசமும் கிடையாது. எங்கள் குரல் எப்போதும் ஏழைகள் பக்கம் எதிரொலிக்கும்.



'முதல்வரை, அதிகாரிகள் வழி நடத்தக்கூடாது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தான், அதிகாரிகளை வழி நடத்த வேண்டும். ஆனால், இங்கு எல்லாமே தலைகீழாக உள்ளது' என அவர்கள் தெரிவித்தனர்.

பதிலடி



இது, த.வெ.க.,வினரிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு த.வெ.க.,வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் கருத்து குறித்து, த.வெ.க.,வைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதில்

அளித்துள்ளார்.



சென்னையில் அவர் அளித்த பேட்டி:


தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சி தான், முழுக்க முழுக்க அதிகாரிகளின் ஆட்சியாக இருந்தது. அன்றைய முதல்வருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்தார். முற்றிலுமாக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த அவர், அதிகாரிகள் சொல்வதை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தார். தற்போது, அப்படி எதுவும் இல்லை.


திண்டுக்கல் அருகே, கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களின் விபரம் சேகரித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது. இது குறித்து, அரசின் கவனத்துக்கு வந்தவுடன், அதற்கு காரணமானவர்கள் மீது, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த ஒரு நிகழ்ச்சியை வைத்து, அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சொல்வது, வேடிக்கையாக உள்ளது.


முதல் முறையாக இது போன்ற வெளிப்படையான ஒரு அரசின் கீழ் பணியாற்றுவதை, நல்லதொரு வாய்ப்பாகவே அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, ஒரு சிலர் செய்யும் தவறால், பொத்தாம் பொதுவாக எதையும் பேசக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement