மானாமதுரை, இளையான்குடியில் உடைந்து விழும் மின்கம்பங்கள்

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் மின் கம்பங்கள் அவ்வப்போது முறிந்து கீழே விழுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மானாமதுரை நகர பகுதிகளுக்கு சிப்காட்டில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் நடக்கிறது. ராஜகம்பீரத்தில் இருந்து கிராமங்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.

இளையான்குடி பகுதியில் இளையான்குடி, சாலைக்கிராமம் மின் தொகுப்பில் இருந்தும் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிற நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு மின் இணைப்புகள் கொடுப்பதற்காக பல ஆண்டிற்கு முன் அமைத்த மின் கம்பங்களில் பெரும்பாலானவை சேதமடைந்து அவ்வப்போது முறிந்து கீழே விழுந்து வருகிறது.

இதனால் மின் தடை ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகிற நிலையில் மின்வாரிய அதிகாரிகள் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் புதிய மின் கம்பங்கள் மாற்றுவதில் தொய்வு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

மானா மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் கொன்னக்குளம் விலக்கு ரோடு அருகே நேற்று முன்தினம் மின் கம்பம் முறிந்து கிடந்துள்ளதால், விபத்து அச்சம் நிலவுகிறது.

மழை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement