பிரதான சாலையில் பேச்சாளை மீன் கழிவுநீரால் துர்நாற்றம்
சாயல்குடி: ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி வழியாக கேரளா செல்லக்கூடிய பேச்சாளை மீன் ஏற்றிச் செல்லும் வேன்களில் இருந்து வழிந்து ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.
தற்போது ராமேஸ்வரம் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் பேச்சாளை மீன்கள் அதிகளவு பிடிபடுவதால் அவற்றை மொத்தமாக குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனங்களில் பெருவாரியாக ஏற்றிச் செல்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் கீழக்கரை, சாயல்குடி, துாத்துக்குடி வழியாக கேரளா செல்லக்கூடிய கண்டெய்னர் லாரிகளில் இருந்து பேச்சாளை மீன்களின் கழிவு நீர் அப்படியே நேரடியாக பிரதான சாலையில் திறந்து விட்டபடி செல்கின்றனர்.
சாயல்குடி அருகே உறைகிணற்றைச் சேர்ந்த மாரியப்பன் கூறியதாவது: சரக்கு வாகனங்களில் திறந்தவெளியில் மீன் கழிவு நீரை விட்டு செல்கின்றனர். துர்நாற்றமும் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
நீரின் வழவழப்பு தன்மையால் சாலையில் செல்லும் பொழுது டூவீலர் ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனை கண்காணித்து தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.