வாலிபருக்கு சரமாரி கத்தி குத்து கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முன்ற வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மிட்டாமண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முருகன் மகன் முத்தரசு 23; இவரது தம்பி முகிலன், 20; இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். முத்தரசு மீது கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு 10;00 மணிக்கு மிட்டா மண்டகப்பட்டு மந்தைவெளி திடலில் முத்தரசு கஞ்சா போதையில் கூட்டாளிகளுடன் மது அருந்தினார். அப்போது அவ்வழியே சென்ற அதே பகுதியை சேர்ந்த பலராமன் மகன் முகேஷ், 23; என்பவரிடம் கஞ்சா பொட்டலங்கள் வாங்கிக்கொள்ளும்படி முத்தரசு கூறினார். மறுத்த அவரிடம் பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு பீர் பாட்டிலால் முகேஷ் தலையில் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்தவர்கள் முகேைஷ பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில், முத்தரசு அவரது தம்பி முகிலன் கூட்டாளியான ஆலமரத்துகுப்பத்தை சேர்ந்த புவனேஷ் ஆகியோர், நள்ளிரவில் முகேஷ் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் வயிற்றில் குத்தினர். மேலும், முகேஷின் தாய் மற்றும் சகோதரிகளை திட்டினர்.

இதில், முகேஷின் குடல் சரிந்தது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முகேஷின் தாய் கனகராணி கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூன்று நாட்கள் கடந்தும் முகேஷை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, மிட்டாமண்டகப்பட்டு கிரா ம மக்கள் மற்றும் உறவினர்கள் நேற்று காலை 10;00 மணிக்கு கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement