தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி

6


சென்னை: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நிலையில், தற்போது 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.

அதன்படி, நவம்பர் 5ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதேசமயம், லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. இதனால் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்தனர்.

நவம்பர் 6ல் வெள்ளிக் கிழமை பயணம் செய்ய இருப்பவர்கள், நாளை செப்., 7ம் தேதியில் காலை 8 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், நவ., 7ம் தேதி பயணம் மேற்கொள்ள, நாளை மறுநாள் செப் 8ம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் பண்டிகை முடித்து திரும்புவோர், செப்டம்பர் 10ம் தேதி முதல், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement