கேரள பாதுகாப்பு சமிதி குற்றசாட்டுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு - நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தல்
கூடலுார், செப்.7–
பெரியாறு அணையில் நிபுணர் மதிப்பீட்டு குழு ஆய்வு கேரளத்தை ஏமாற்றுவதற்காக நடந்தது என குற்றம்சாட்டி உள்ள கேரள மக்கள் பாதுகாப்பு சமிதிக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையில் செப்.1 முதல் 3 வரை மத்திய நிபுணர் மதிப்பீட்டு குழு தலைவர் பல்ராம் ஜோஷி தலைமையில் ஆய்வு நடந்தது. இந்த ஆய்வு பற்றி கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி தலைவர் ராய் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவில் அணையில் மேற்கொள்ளப்படும் நிபுணர் குழுவின் பரிசோதனை தகுதி வாய்ந்த வல்லுநர்கள் தலைமையில் நடத்த வேண்டும். கடந்த காலங்களைப் போலவே தற்போதும் கேரளத்துக்கு எதிரான அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்கும். 131 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் பலவீனத்தை சர்வதேச அளவிலான நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அணையின் நீர் நிலையியல், கட்டமைப்பு பாதுகாப்பு, கசிவு நீர் அமைப்பு, விரிசல்கள் வழியாக வெளியேறும் நீரின் அளவு, நிலநடுக்க அபாயம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும். மேலோட்டமாக அணையை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பது முறையல்ல. மீண்டும் கேரளாவை ஏமாற்றுவதற்காகவே இந்த நிபுணர் குழுவின் ஆய்வு நடந்துள்ளது, என்றார்.இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீர்மட்டத்தை 152அடி உயர்த்த நடவடிக்கை வேண்டும்
அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்:
பெரியாறு அணையில் பல்வேறு தொழில் நுட்ப நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் 2014ல் தீர்ப்பளித்துள்ளது. அறிவியல் ரீதியாக பரிசோதித்து பாதுகாப்பாக உள்ளது என சான்றளிக்கப்பட்டுள்ளது. அதை மறைத்து அணை பலவீனமாக உள்ளது என பொய் பிரச்சாரம் செய்வது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். ஐந்து மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்கும் அணையை செயலிழக்க செய்யக் கூறுவது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் முயற்சியாகும். 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் குத்தகை ஒப்பந்தத்தின்படி அணை அமைப்பதற்கான உரிமையும் நீரை கட்டுப்படுத்தும் உரிமையும் தமிழகத்திற்கு சட்டபூர்வமாக உள்ளது. எனவே தேவையற்ற பிரச்சாரங்களுக்கு மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் செவிசாய்க்க கூடாது. அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவான 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி