சீமை கருவேல மரம் அகற்றாவிட்டால் அபராதம்

அன்னூர்: தனியார் நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தில் உள்ள கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை :

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மற்றும் தேசிய நீதி பேராணையின் அடிப்படையில், கிராம ஊராட்சி பகுதி, நீர்நிலை மற்றும் இதர பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனியார் நில உரிமையாளர்கள், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள், தங்களது நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்.

அவ்வாறு செய்ய தவறினால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அல்லது மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்படும் பிற அலுவலர்கள், தனியார் நிலங்களை ஆய்வு செய்து, அங்குள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றுவார்கள். அகற்றப்பட்ட மரங்கள் சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர்களின் பொறுப்பில் விடப்படும்.அவற்றை வேரோடு அகற்றுவதற்கு, சீமை கருவேல செடிகள் அடர்த்தியாக முதிர்ந்த நிலையில் இருந்தால், ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாயும், அடர்த்தி குறைவாக இருந்தால், ஏக்கருக்கு 2,000 ரூபாயும் வசூலிக்கப்படும்.

எனவே, விரைவில் தனியார் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement