வரதட்சணை கேட்டதால் பெண் தற்கொலை: கணவரை கைது செய்யக்கோரி மறியல்

கள்ளக்குறிச்சி: வரதட்சணை கேட்டதால் பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் மனைவி அமுதா, 19; கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருமணம் நடந்தது. கணவர், மாமனார் ஏழுமலை, மாமியார் சோலையம்மாள் வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த அமுதா நேற்று முன்தினம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அமுதா இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் ரோடுமாமாந்துாரில் நேற்று மாலை 3:40 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டி.எஸ்.பி., கலையரசன், இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், ஆர்.டி.ஓ., விசாரணையில் கோகுல் குடும்பத்தினர் மீது குற்றம் உறுதியாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, 4:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement