ரூ.1.75 கோடியில் சண்முகநதி சுத்தம் செய்ய அரசு முடிவு: மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி

பழநி: 'பழநியில் சண்முக நதியை ரூ.1.75 கோடியில் சுத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.' என, மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

பழநிக்கு வந்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைகளை சரி செய்ய அரசு முனைப்போடு உள்ளது. கடைகளில் பாட்டில் உடைவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு அதனை சரி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசுக்கு தொழிலாளர்கள் மீது வெறுப்பு இல்லை. பழநியில் ஆர்.எப்.,ரோடு பகுதியில் உள்ள மதுபான கடை பொது மக்களுக்கு இடையூறாக இருந்தால் மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சண்முக நதியை துாய்மைப்படுத்த ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.

திருஆவினன்குடி கோயில் பகுதியிலும் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கலில் தனியார் கல்லுாரி மாணவர்கள் கேரளா விபத்தில் இறந்தது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது. கள்ளுக் கடைகள் திறப்பதில் சாதக பாதகங்கள் குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் சில கள்ளுக்கடைகளுக்கு சாராயம் கொண்டு செல்வதாக தெரியவந்தது. எனவே தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்., என்றார்.

Advertisement