அடிப்படை வசதிகளின்றி ஆடு வார சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஆடு வார சந்தையில் வழிப்பாதை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதி இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

உளுந்துார்பேட்டையில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் ஆடு மற்றும் காய்கறி விற்பனை நடைபெறும். காய்கறி வார சந்தை திருச்சி சாலை சந்திப்பு பகுதியில் உழவர் சந்தை பகுதியில் நடந்து வருகிறது.

ஆடு வார சந்தை சேலம் சாலையில் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் நடந்து வருகிறது. இதனால் சந்தைக்கு வரும் வாகனங்களை டி.எஸ்.பி .,அலுவலகம் முன்பும், சாலையிலேயும் நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக ஆடு வார சந்தை போதிய இட வசதி இல்லாமல் இருந்தது. பின் அதன் அருகே இருந்த ஏரி பகுதியில் ஆடு சந்தையை நடத்தி வருகின்றனர். ஆனால் சந்தைக்கு செல்வதற்கான சாலை இல்லை.

மழை பெய்தால் மேடு, பள்ளமான பகுதியாக பாதை மாறி விடுகிறது. இவ்வழியாக வாகனங்களில் ஆடுகளை ஏற்றிச் செல்வதில் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர்.

அதோடு மட்டுமின்றி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரும் விற்பனையாளர்கள், வாங்கும் பொதுமக்களுக்கு குடிக்க தண்ணீர் வசதி கூட இல்லாத நிலை இருந்து வருகிறது.

ஆனால், கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதனால் சந்தைக்கு வரும் ஆடுகளின் வரத்து மற்ற வார சந்தைகளையும் விட குறைவாக உள்ளது.

நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஆடு வார சந்தை பகுதியில் நகராட்சி அலுவலகம் மூலம் கட்டண வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இல்லாத போது வார சந்தை குத்தகை ஏலம் எடுப்பவர்களால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை, ஆடு வார சந்தைக்குச் செல்லும் பாதையை ஏற்படுத்துவோ, அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவோ எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இது வியாபாரிகளிடயேயும், பொதுமக்களிடையேயும் கடும் அவதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே நகராட்சி அதிகாரிகள் வார சந்தை நடக்கும் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement