சதம் விளாசினார் இஷான் கிஷான்: கிழக்கு மண்டலம் ரன் குவிப்பு
சென்னை: துலீப் டிராபி பைனலில், கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷான் சதம் விளாசினார்.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் துலீப் டிராபி கிரிக்கெட் பைனலில் (5 நாள் போட்டி) கிழக்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷான், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், இளம் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது சிராஜ் வீசிய 7வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் வைபவ். ஈஸ்வரன், 46 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது சாமா மிலிந்து பந்தில் வைபவ் (44) அவுட்டானார். ஈஸ்வரன் (72) 'ரன்-அவுட்' ஆனார். ஷிகர் மோகன், கேப்டன் இஷான் கிஷான் ஜோடி நம்பிக்தை தந்தது. மோகன், 61 பந்தில் அரைசதம் எட்டினார். மிலிந்து பந்தில் மோகன் (85) அவுட்டானார்.
இஷான் அபாரம்: அடுத்து வந்த குமார் குஷாரகா, 67 பந்தில் அரைசதம் எட்டினார். இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் கோபால் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி முதல் தர போட்டியில் தனது 10வது சதத்தை பதிவு செய்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 385/4 ரன் எடுத்திருந்தது. இஷான் கிஷான் (111), குஷாரகா (63) அவுட்டாகாமல் இருந்தனர். தெற்கு மண்டலம் சார்பில் மிலிந்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
4000 ரன்
பேட்டிங்கில் அசத்திய கிழக்கு மண்டல அணி கேப்டன் இஷான் கிஷான், முதல் தர போட்டியில் 4000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். இதுவரை 67 போட்டியில், 10 சதம், 19 அரைசதம் உட்பட 4063 ரன் குவித்துள்ளார்.
இது சரியா திலக் வர்மா
முகமது சிராஜ் வீசிய 7வது ஓவரில், ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார் வைபவ் சூர்யவன்ஷி. 11வது ஓவரின் முடிவில் தெற்கு மண்டல அணி கேப்டன் திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். இதை பார்த்த ரசிகர்கள், 15 வயது சிறுவனிடம் சண்டையிடலாமா என திலக் வர்மாவை விமர்சித்தனர்.
'பேபி பாஸ்' வைபவ்
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் துலீப் டிராபி பைனலை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். கிழக்கு மண்டல அணிக்காக விளையாடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை காண சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். போட்டியின் போது 'வைபவ் பாய்', 'வைபவ் ஜீ', 'வைபவ்' என உற்சாகமாக முழக்கமிட்டனர். ஆட்டநேர முடிவில் ரசிகர்களுக்கு 'ஆட்டோகிராப்' வழங்கினார் வைபவ்.
இதற்கு முன் 2013ல் ரோதக் நகரில் நடந்த ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணி சார்பில் விளையாடிய சச்சினை காண, சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் வந்தனர்.
93 நிமிடம்
வைபவ் சூர்யவன்ஷி எதிர்கொண்ட முதல் 14 பந்தில், 11 ரன் எடுத்தார். அடுத்த 10 பந்தில், 23 ரன் (1X6, 4X4) விளாசிய இவர், 24 பந்தில் 34 ரன் எடுத்திருந்தார். மொத்தம் 93 நிமிடம் 'பேட்' செய்த இவர், 37 பந்தில் 44 ரன் ('ஸ்டிரைக்ரேட்' 118.91) விளாசினார்.
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்