தொடரும் கனமழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு: பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிப்பு

பாட்னா: கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக பீஹார் தலைநகர் பாட்னா, சரண், வைஷாலி,சமஸ்திபூர், பெகுசராய் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள், மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

கங்கையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பீஹாரில் மட்டும் 22 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல 1429 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மாநில பேரிடரின் 27 குழுக்கள், தேசிய பேரிடரின் 10 குழுக்களும் மீட்புப் பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளன. கனமழை, வெள்ளப்பெருக்கு எதிரொலியாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு இருக்கின்றன.

அடுத்த இரண்டு நாட்களுக்கு பீஹாரின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும், தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாநில நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பீஹாரில் செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை 69 மி.மீ மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட இது 55 சதவீதம் அதிகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement