மீனாட்சி கோயில் இடமோசடி  வழக்கில் மேலும் 4 பேர் கைது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை செய்வதற்கான அறக்கட்டளை இடத்தை அபகரித்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மீனாட்சி அம்மன் கோயில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக 1930ல் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.60 கோடி மதிப்பு கொண்ட மதுரை சொக்கிகுளம் அசோதா விலாஸ் பங்களா மற்றும் தோட்டத்தை அபகரிக்கும் வகையில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக 19 பேர் மீது வழக்கு பதிந்த நிலையில், உசிலம்பட்டி இளையராஜா, புதுக்கோட்டை கறம்பக்குடி ராஜ்குமார், தாசில்தாராக இருந்தபோது பட்டா வழங்கிய ராமநாதபுரம் கலெக்டர் பி.ஏ., அன்பழகன், திண்டுக்கல் காளிக்குமார், முன்னாள் வி.ஏ.ஓ., அரசன், முன்னாள் சார்பதிவாளர் அனந்தராமன் என 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டையை சேர்ந்த முத்துராணி 60, ராஜேந்திரன் 59, ஜோதி 50, கீதா 49, ஆகிய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் இதுவரை 3 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement