'மனதில் என்ன இருக்கிறது?'

'ஏற்கனவே, தோல்வி பாதையில் கட்சி பயணிக்கிறது. இதில், நிர்வாகிகள் நியமனத்தில் எதற்கு இவ்வளவு குழப்பம்...?' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதியை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

பகுஜன் சமாஜ் கட்சி, 2012க்கு பின், குறிப்பிட்டு சொல்லும்படியான தேர்தல் வெற்றி எதையும் பெறவில்லை. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில், தொடர் தோல்வி ஏற்பட்டதால், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், வேறு கட்சிகளுக்கு ஓடி விட்டனர்.

இந்நிலையில், அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தன் மருமகன் ஆகாஷ் ஆனந்தை, 2023ல் நியமித்தார் மாயாவதி. ஆகாஷ் ஆனந்திற்கு, 31 வயது தான் ஆகிறது. இதனால், கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வார் என, நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் 2024ல், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி. ஒரு மாதத்திலேயே, மீண்டும் அவருக்கு பொறுப்புகளை வழங்கினார். அடுத்த ஆறு மாதங்களிலேயே, மீண்டும் அவரது பொறுப்புகளை பறித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாயாவதி, 'ஆகாஷ் ஆனந்த், அரசியலில் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டியுள்ளது. அவருக்கு, கட்சியில் எந்த பொறுப்பையும் தரப்போவது இல்லை. கட்சியில், சாதாரண தொண்டராக அவர் தொடரலாம்...' என அதிரடியாக அறிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளோ, 'மாயாவதி மனதில் என்ன இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியவில்லையே...?' என, புலம்புகின்றனர்.

Advertisement