இன்சூரன்ஸ் : உடல்நலம் குறித்த தகவல்களால் ஏற்படும் சிக்கல்கள்
1 ஒருவர் ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு எடுத்து, தொடர்ந்து 5 ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு இறந்துவிடுகிறார். அவரது குடும்பம் காப்பீட்டு தொகையை கோரும்போது, பாலிசி எடுக்கும் நேரத்தில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஒரு தகவலை விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை என்று கூறி காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரிக்க முயல்கிறது.
ஆனால், பாலிசி வழங்குவதற்கு முன் அந்த நபரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தாததும், அவர் செலுத்திய பிரீமியத்தை 5 ஆண்டுகள் ஏற்றுக்கொண்டதும் நிறுவனத்தின் பொறுப்பாக கருதப்பட வேண்டுமா?
2 மேலும், அந்த தகவல் உண்மையில் மரணத்திற்கான காரணத்துடன் தொடர்புடையதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டாமா?
3 “இந்த சிறிய உடல்நல பிரச்னையை குறிப்பிட தேவையில்லை” என்று முகவர் வாய்மொழியாக கூறியிருந்தால், அதற்கான பொறுப்பு பாலிசிதாரருக்கா, முகவருக்கா அல்லது காப்பீட்டு நிறுவனத்திற்கா?
முனைவர் பெ. வை. சே. கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம்.
முதல் கேள்விக்கான பதில்:
ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பதற்கு முன், உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்னைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதா, நிராகரிப்பதா, பிரீமியம் எவ்வளவு நிர்ணயிப்பது, பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பதை காப்பீட்டு நிறுவனம் தீர்மானிக்க இந்த தகவல்கள் முக்கியமானதாக இருக்கலாம். இந்த நடைமுறை 'அண்டர்ரைட்டிங்' என்று அழைக்கப்படுகிறது. இது 'மிக உயர்ந்த நம்பிக்கையுடன் செயல்படுதல்' என்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகிறது.
காப்பீடு பெறுபவர் தனது உடல்நலம் தொடர்பான தகவல்களை முழுமையாகவோ அல்லது குறைபாட்டுடனோ தெரிவித்தும், காப்பீட்டு நிறுவனம் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டும் பாலிசி வழங்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு பாலிசி வழங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்டால், பாலிசி எடுக்கும் போது தகவல்களை வெளியிடாதது அல்லது தவறான தகவல் அளித்தது போன்ற காரணங்களை கூறி கிளெய்மை நிராகரிக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது.
மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டால், வயது, வாழ்க்கை முறை அல்லது மருத்துவ வரலாறு தொடர்பாக தவறான தகவல் அளித்திருந்தாலோ, தகவல்களை தெரிவிக்க தவறியிருந்தாலோ கூட, அந்த தவறுகளை சுட்டிக்காட்டி கிளெய்மை நிராகரிப்பதிலிருந்து இந்த 'கிளெய்ம் மறுக்க முடியாத விதி' பாலிசிதாரருக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
இந்த மூன்று ஆண்டு காலம், பாலிசி அல்லது ரைடர் தொடங்கிய நாள் அல்லது பிரீமியம் செலுத்தாததால் காலாவதியான பாலிசி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாள் ஆகியவற்றிலிருந்து கணக்கிடப்படும்.
இரண்டாம் கேள்விக்கான பதில்: மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டால், தெரிவிக்கப்படாத உடல்நல பிரச்னை அல்லது அதற்காக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கும், மரணத்திற்கான காரணத்திற்கும் இடையே தொடர்பு இருந்ததா என்பது கிளெய்மை நிராகரிப்பதற்கான காரணமாக இருக்காது; கிளெய்ம் தொகை வழங்கப்பட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டால், தெரிவிக்கப்படாத உடல்நல பிரச்னைக்கும் மரணத்திற்கான காரணத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு சட்டபூர்வமான உரிமை உள்ளது. எந்த சூழ்நிலையிலும், தகவல்களை வெளியிடாமல் இருப்பது கிளெய்ம் பரிசீலிக்கப்படும் காலத்தை நீட்டிக்கும். எனவே, உங்களுக்கு தெரிந்த அனைத்து முக்கியமான தகவல்களையும் முழுமையாக தெரிவிப்பதே உங்கள் நலனுக்கு உகந்தது.
மூன்றாம் கேள்விக்கான பதில்:
உங்கள் முகவர், ஒரு குறிப்பிட்ட உடல்நல பிரச்னையை குறிப்பிட தேவையில்லை என்று வாய்மொழியாக அறிவுறுத்தி, அந்த தகவலை மறைக்க செய்திருந்தாலும், அதை நிரூபிக்கும் எழுத்துப்பூர்வமான அல்லது மின்னணு ஆதாரம் இல்லாத நிலையில், சட்டரீதியான பொறுப்பு முழுதும் உங்களுடையதாகவே இருக்கும். மேலும், முன்மொழிவு படிவத்தில் நீங்கள் கையெழுத்திட்டிருப்பதால், சட்டம் இதற்கான பொறுப்பை உங்களுடையதாகவே கருதும்.
பல நேரங்களில், நேரத்தை மிச்சப்படுத்தி விரைவாக பாலிசியை வழங்குவதற்காக, இதுபோன்ற தகவல்களை விட்டுவிடுமாறோ அல்லது காலியாக உள்ள படிவத்தில் கையெழுத்திடுமாறோ சில முகவர்கள் கூறலாம். காரணம் எதுவாக இருந்தாலும், நீங்கள் கையெழுத்திட்டிருந்தால், அதற்கான பொறுப்பு உங்களுடையதாகிவிடும்.
பாலிசி வழங்கப்படும் போது, நீங்கள் பூர்த்தி செய்து கையெழுத்திட்ட முன்மொழிவு படிவத்தின் நகலை காப்பீட்டு நிறுவனம் உங்களுக்கு வழங்க வேண்டும். அந்த நகலை பெற்று, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து, பாதுகாப்பாக வைத்திருப்பது உங்கள் நலனுக்கு உகந்தது.
ஏனெனில், இந்தப் படிவமே காப்பீட்டின் அடிப்படையாக இருக்கும். எதிர்காலத்தில் ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், இதன் அடிப்படையிலேயே அது தீர்மானிக்கப்படும்.