நக்சலை ஒழித்தது போல் போதைப்பொருளையும் ஒழிப்போம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளூரை

10

பணஜி: ''போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியே, 2047ல், 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாட்டை வழிநடத்தும் என, பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். நக்சல்களை ஒழித்தது போல் 2029க்குள் போதைப்பொருளையும் ஒழிப்போம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பணஜியில் நேற்று நடந்த போதைப்பொருள் தடுப்பு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

இதில், முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய - மாநில உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

நடவடிக்கை கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

மத்தியில் காங்., ஆட்சியில் இருந்த போது, போதைப்பொரு ளுக்கு எதிராக சிறிய அளவிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன் நெட்வொர்க்கை கண்டுபிடித்து அழிக்காமல், சிறிய குற்றவாளிகளையே போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அப்போது கைது செய்தனர்.

ஆனால், மத்தியில், 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், போதைப்பொருள் விவகாரத்தை தேச பாதுகாப்பின் முன்னுரிமையாக மாற்றி கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இலக்கு போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கையை உறுதி செய்ய, 2019-ல், நிர்வாக, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் நான்கு அடுக்கு கொண்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்புக்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் போலீசார் தேசிய உத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் உறுதிப்பாடு, ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள், போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், 'போதைப்பொருள் இல்லாத இந்தியா - 2029' என்ற இலக்கை அடைய மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

போதைப்பொருளற்ற இந்தியாவிற்கான மூன்று ஆண்டு வரைபடமானது , உளவுத்துறை மற்றும் நடவடிக்கை அடிப்படை யிலான அமலாக்கம், செயற்கை போதைப்பொருள் மீதான கட்டுப் பாடு, தேவை மற்றும் தீங்கு குறைப்பு, திறன் மற் றும் ஒருங்கிணைப்பை உருவாக்குதல் ஆகிய நான்கு துாண்களை அடிப் படையாக கொண்டது.

உறுதி மத்திய அரசின் உள்நாட்டு பாதுகாப்பு உத்தியானது, ஜம்மு - -காஷ்மீரில் பயங்கரவாதம், வடகிழக்கில் கிளர்ச்சி மற்றும், இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது.

எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது, துடிப்பான கிராமங்கள் திட்டம் ஆகியவை உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை களில் அடங்கும்.

நக்சலிசம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒழிக்க மத்திய அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்ததோ, அதே போல், வளர்ந்த இந்தியாவின் கனவை நனவாக்க நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலையும் முழுமையாக அகற்ற உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement