மும்பை விநாயகருக்கு ரூ.703 கோடி காப்பீடு

மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட உள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி, வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிற மாநிலங்களை விட மஹாராஷ்டிராவின் மும்பையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

அந்த வகையில், மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை ஆண்டுதோறும், 'ஜி.எஸ்.பி., சேவா மண்டல்' என்ற அமைப்பு நடத்தி வருகிறது. 72வது ஆண்டாக இந்தாண்டு நடத்தப்பட உள்ள விழாவை ஒட்டி அப்பகுதியில் பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும், 12ம் தேதி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து, 14 முதல் 18ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு இங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக, விநாயகரின் சிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு, 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜி.எஸ்.பி., சேவா மண்டல் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அமித் பாய் கூறியதாவது:
இங்கு அமைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைக்கு, பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட, 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி, நவரத்ன கற்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட உள்ளன.

அதிக மதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், விநாயகர் சிலை மற்றும் அதன் தொடர்புடைய பாதுகாப்புக்காக, 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள், பணியாளர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீடு, விழா பந்தல் மற்றும் பாதிப்புகளுக்கான காப்பீடு ஆகியவை இதில் அடங்கும்.

ஐந்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில், இரண்டு லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாள்தோறும், 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் இந்த காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, 474 கோடி ரூபாய்க்கு காப்பீடு எடுக்கப்பட்டது. தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததால், காப்பீடு தொகையின் மதிப்பும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement