மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்

வேளச்சேரி: வேளச்சேரியில் 62 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மூடுகால்வாயில், 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு பகுதி அமைக்காததால், தற்போது தடைபட்டுள்ள நீரோட்டத்தை சீரமைப்பதில் சிக்கல் உள்ளது. கால்வாய்க்குள் ஆறாக ஓடும் கழிவுநீரால் விஷவாயு தாக்கம் அதிகமாக இருப்பதால், ஊழியர்கள் பணி செய்ய அச்சப்படுகின்றனர்.

மழைக்காலத்தில், வேளச்சேரி ஏரியில் நிரம்பும் உபரிநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும் முன், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், சதுப்பு நிலத்திற்கு செல்லாமல் பகிங்ஹாம் கால்வாயில் உபரிநீர் விட, தரமணி 100 அடி சாலையில், 62 கோடி ரூபாயில், 18 அடி அகலம், 7 அடி ஆழத்தில் மூடுகால்வாய் கட்டப்பட்டது.

இதில் டி.சி.எஸ்., பகுதியில் மூடுகால்வாய்க்கு பள்ளம் தோண்டியபோது, அங்கு கடினமான பாறைகள் இருந்ததால், அதை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதனால், நீரோட்டத்திற்கு ஏற்ற வகையில் கால்வாய் அமைக்காமல், 2016ல் அரைகுறையாக கட்டி முடிக்கப்பட்டது.

மேலும், எல்.ஐ.சி., காலனி, டான்சி நகர், அன்னை இந்திரா நகர் உள்ளிட்ட உட்புற தெருக்களில் வடியும் மழைநீர் வடிகால், இந்த மூடுகால்வாயுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால், மூடுகால்வாயில் அதிகப்படியான கழிவுநீர் தேங்கியுள்ளது.

இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நீர்வளம், நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

அதில், நீரோட்டம் இல்லாதது, மூடுகால்வாயில் அடைப்பு காரணமாக வெள்ளம் பின்னோக்கி பாய்வதுடன், வெயில் காலத்தில் கழிவுநீர் ஆறாக ஓடுவதும் தெரிந்தது.

தவிர, 3.5 கி.மீ., துார மூடுகால்வாயில், 'மேன்ஹோல்' எனும் இயந்திர நுழைவு பகுதி அமைக்காததால், எந்த பகுதியில் நீரோட்டம் செல்ல தடை, அடைப்பு இருக்கிறது என கண்டறிய முடியாமல், அதிகாரிகள் திணறினர்.

இந்நிலையில், அமெரிக்கன் பள்ளி, டி.சி.எஸ்., டான்சி நகர் பகுதிகளில், மூடுகால்வாயை உடைத்து பார்க்க, நீர்வளத்துறை முடிவு செய்தது. ஆனால், கழிவுநீரால் கால்வாய்க்குள் விஷவாயு தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் முன்வரவில்லை.

இதனால், வரும் பருவமழைக்கு இந்த மூடுகால்வாயால் வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில், சிறிய அளவில் உடைத்து பணி செய்தபோது, விஷவாயு வெளியேறி ஒரு ஊழியர் பாதிக்கப்பட்டார். இதனால், மறுபடியும் கால்வாயின் மேற்புற பகுதியை உடைத்து பணி செய்ய, ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.

கழிவுநீர் பாதையை அடைத்தால் தான், மூடுகால்வாய்க்குள் இறங்க முடியும் அல்லது கால்வாயின் மேற்பகுதி முழுவதையும் உடைக்க வேண்டும்.

இந்த பணிகள், பருவமழைக்கு முன் முடிய வாய்ப்பில்லை. ஜன., மாதம் துவங்கினால், ஓரிரு மாதத்தில் கால்வாயில் நீரோட்டத்தை சரி செய்யும் வகையில் ஒப்பந்தம்விட, உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement