விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர்.

பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த ஆண்டில் தற்போது வரை, 50க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இந்நிலையில், ரோட்டில் விபத்தை தடுப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

இதில், விபத்து அதிக அளவில் ஏற்படும் இடங்களை அடையாளப்படுத்துதல், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துதல், வேகக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பது, பொதுமக்களிடையே சாலை விதிகளை பின்பற்றி பயணிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவைகள் விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் விபத்து நடக்கும் இடங்களை ஆய்வு செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

பொள்ளாச்சி - கோவை ரோட்டில் வாகனங்கள் வேகமாக பயணிக்கின்றன. ஆனால், ஒரு சில முக்கிய இடங்களான மேம்பாலம் ஆரம்பம் மற்றும் முடியும் இடங்கள், பள்ளி, கல்லூரி பகுதி, சர்வீஸ் ரோடு, 'யூ டர்ன்' உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்து அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை கவனித்து வாகன வேகத்தை குறைக்க வேண்டும். வாகன ஓட்டுநர்கள் அதற்கு மாறாக, கவனக்குறைவாக வேகமாக பயணிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் பயணிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது, முதற்கட்டமாக முக்கிய இடங்களில், கூடுதலாக மின் விளக்குகள், சிக்னல்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ரோட்டின் இடது பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும். தாறுமாறாக இருசக்கர வாகனங்களை இயக்கக்கூடாது.

இவ்வாறு, கூறினர்.

Advertisement