சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் இன்று நடக்கும் உயர்மட்டக் கூட்டத்தில், சமூக நீதி, மத்திய அரசின் நலத்திட்டங்களின் செயல்திறன் குறித்து ஆய்வு நடக்க உள்ளது.

துறை சார்ந்த திட்டங்கள், அவற்றின் செயல்திறன் குறித்து, பிரதமர் மோடி அவ்வப்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் டில்லியில் இன்று, சமூக நீதி, மத்திய அரசின் நலத்திட்டங்களின் செயல்திறன் குறித்து அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், இணை அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வழக்கமான துறை வாரியான மதிப்பீட்டை தாண்டி, அமைச்சர்களின் செயல்திறன் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாரக மந்திரம்




இந்த மதிப்பாய்வு நடவடிக்கையில் கல்வி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, விவசாய அமைச்சகங்கள் ஆகியவை இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக நீதி, நலத்திட்டங்களை செயல்படுத்துதல், அவை கடைக்கோடி மக்களையும் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றை தாரக மந்திரமாக ஆளும் தே.ஜ., கூட்டணி அரசு கடைப்பிடிப்பதால், இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, நிரந்தர வீடு, மருத்துவ காப்பீடு, விவசாயிகளுக்கு நிதியுதவி, அனைவருக்கும் குடிநீர், துாய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்களின் செயல்திறன் குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கள நிலவரம், முதன்மை திட்டங்களின் செயலாக்கம், எட்டப்பட்ட இலக்குகள் மற்றும் சரி செய்யப்பட வேண்டிய குறைபாடுகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

நலத்திட்டங்கள்




சமூக நீதிக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம், மத்திய அரசின், 'அனைவருக்குமான வளர்ச்சி' என்ற பரந்த அரசியல் மற்றும் நிர்வாகக் கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகிறது. குறிப்பாக, இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மூலம் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.

நலத்திட்டங்களை செயல்படுத்துவது என்பது, இனி வெறும் திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடுவதில்லை; மாறாக, செயல்திறன், செயலாக்கம் மற்றும் அதன் தாக்கம் தொடர்ந்து அளவிடப்படுகின்றன என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது.

Advertisement