இஸ்ரோவை தனியார் மயமாக்குவதா? விளக்கம் கேட்கும் ஊழியர் சங்கங்கள்

6

புதுடில்லி: 'இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும்' என, இஸ்ரோவைச் சேர்ந்த ஒன்பது ஊழியர் சங்கங்கள், அதன் தலைவர் நாராயணனுக்கு கடிதம் எழுதியுள்ளன.

இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடிதம்



தனியார் விண்வெளி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து, அனுமதித்து, கண்காணிக்கும் பணிகளை, 'இன்-ஸ்பேஸ்' எனப்படும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆக., 21ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'இன்-ஸ்பேஸ்' தலைவர் பவன் கோயங்கா பேசுகையில், 'வரும் காலங்களில் இஸ்ரோ எந்த ராக்கெட்டுகளையும் தயாரிக்காது.

'ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் உற்பத்தி பணிகள் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் மேற் கொள்ளப்படும்' என்றார்.

இது குறித்து விளக்கம் கேட்டு இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு ஊழியர் சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

அதன் விபரம்:

இஸ்ரோவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கானதாக மட்டும் கட்டுப்படுத்தி, நாட்டின் ராக்கெட்டுகளின் தயாரிப்பு மற்றும் ஏவுதள செயல்பாடுகளை அரசு கட்டுப்பாட்டில் இருந்து வெளியே கொண்டு செல்லும் கொள்கையை, விவாதமின்றி ஏற்க முடியாது.

நிலைப்பாடு



இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்பம் தேசிய சொத்து. அதை தனியாருக்கு மாற்றும் நடவடிக்கை வெளிப்படையாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும்.

அதன் கொள்கை, சட்ட மற்றும் நிர்வாக அடிப்படை, செயல்படுத்தப்படும் காலகட்டம், தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம் ஆகியவை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

பி.எஸ்.எல்.வி., எல். வி.எம். 3., எஸ்.எஸ்.எல்.வி. , மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ராக்கெட்டுகளின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, ஒருங்கிணைப்பு, சோதனை மற்றும் ஏவுதல் பணிகள் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்குமா அல்லது தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இஸ்ரோவின் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தற்போதுள்ள காலியிடங்கள், புதிய ஆட்சேர்ப்பு கால அட்டவணை மற்றும் இஸ்ரோவின் அனைத்து மையங்களிலும் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான எதிர்கால நிலைப்பாடு குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement