கல்வி கடனை முன்கூட்டியே அடைத்தால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா?

1

நான் முன்னாள் ராணுவ வீரர்; 30 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறேன். இதில், கடனுக்காக வங்கியில் 14 ஆயிரத்து 430 ரூபாய் இ.எம்.ஐ., பிடித்தம் செய்கின்றனர். தற்சமயம் எனக்கு இருசக்கர வாகனம் வாங்க, வங்கியில் கூடுதலாக 1.50 லட்சம் ரூபாய் கடனை இ.எம்.ஐ., வாயிலாக எடுக்கலாம் என்று மனைவியிடம் அனுமதி கேட்டால், மறுப்பு தெரிவிக்கிறாள் . என்ன செய்வது?

ரெங்கராஜன், தேனி


ரூபாய் 1.50 லட்சம் கூடுதல் கடன் வாங்கினால், என்ன இ.எம்.ஐ., வரும், அது எப்படி உங்களுடைய வீட்டு மாதாந்திர பட்ஜெட்டில் சிக்கலை ஏற்படுத்தும் என்றெல்லாம் அவர் கிடுகிடுவென ஒரு நிதி அமைச்சர் போல் கணக்கிட்டு, உங்கள் யோசனைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்.

இருசக்கர வாகனம் வாங்கினால், அதனால் எவ்வளவு கூடுதலாக உழைக்க முடியும், வருவாய் ஈட்ட முடியும், வீட்டின் மொத்த வருமானத்தை பெருக்க முடியும், எதிர்காலத்துக்கு சேமிக்க முடியும் என்றெல்லாம், பிரதமர் போல் நீங்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தை முன்வைத்து, 'கன்வின்ஸ்' செய்ய பாருங்களேன்.

வாகனம் வாங்கிய பிறகு கிடைக்க போகும் கூடுதல் வருமானம், புதிய இ.எம்.ஐ., பெட்ரோல், பராமரிப்பு செலவு ஆகியவற்றை கணக்கு போட்டு, உண்மையில் குடும்பத்துக்கு அது லாபகரமான முடிவா என்பதையும் முதலில் பாருங்கள்.

யார் வெற்றி பெற்றாலும், குடும்பத்துக்கு நல்லது தானே?



'எஸ்.ஐ.பி., ஸ்வீப் இன்' அல்லது பிற பயனுள்ள வழிகளில் முதலீடு செய்வது குறித்து வழிகாட்டுதலை வழங்கவும்.

சிவராமன், மதுரை


நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் வழிமுறைகள். அதாவது, எஸ்.ஐ.பி., என்பது மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மாதா மாதம் பணம் போடுவதை, 'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்று அழைப்பர். கடந்த 10 ஆண்டுகளில், இந்திய மத்திய வருவாய் பிரிவினர் இந்த எஸ்.ஐ.பி., வழி முதலீடுகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். பங்குச்சந்தையை சார்ந்த பண்டுகளாக இருந்தால், வைப்பு நிதியை விட சற்று கூடுதலான வருவாயை இந்த திட்டங்கள் ஈட்டித் தருவதால், பலருக்கும் நம்பிக்கைக்குரிய முதலீட்டு முறையாக எஸ்.ஐ.பி., மாறியுள்ளது.

ஸ்வீப்- இன் என்பது வங்கி சேமிப்பு கணக்கில் கூடுதலாக உள்ள தொகையை, அப்படியே வைப்பு நிதியாக மாற்றிக் கொள்வதற்கான வழிமுறை. பல பேர் வீடு விற்ற பணம், ஓய்வுகால நிதி உள்ளிட்ட பெருந்தொகையை முறையாக முதலீடு செய்வதற்கு முன், தமது சேமிப்பு கணக்கில் வைத்திருப்பர். அவர்கள் முடிவெடுப்பதற்கு சற்று காலதாமதம் ஆகும் நேரத்தில், இருக்கும் தொகையை கூடுதல் வட்டி ஈட்டித்தர வைப்பதே ஸ்வீப் -இன் வசதி. தேவையானபோது, வங்கியின் விதிமுறைகளின்படி அந்த தொகை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலும் இந்த வசதி இருக்கும்.

முதலீடு என்பது உங்களது 'ரிஸ்க்' எடுக்கும் தைரியத்தை பொறுத்தது. ஒருவேளை நீங்கள் சின்ன வயதுக்காரர், ஓய்வு பெறுவதற்கு பல ஆண்டுகள் உள்ளன என்றால், பங்குச்சந்தை பற்றி தெரிந்து கொண்டு, அதில் முதலீடு செய்ய முயலுங்கள்.


எனக்கு தெரிந்த ஒருவர் உரிமை தொகை பெற, கோவை, பேரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் 10 பைசா ஆரம்ப இருப்பாக வைத்து கணக்கை ஆரம்பித்தார். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் பணம் எடுக்கிறார். ஆனால், வங்கியில் 1,000 ரூபாய் தான் தருகின்றனர்; 1,000 ரூபாய் பிடித்து கொள்கின்றனர். கேட்டால், வங்கி கணக்கில் 1,000 இருப்பு இருக்க வேண்டும் என்கின்றனர். அவர்கள் செய்வது சரியா?

ஆ.பட்டிலிங்கம், கோவை

உங்கள் நண்பர் வைத்திருப்பது வழக்கமான சேமிப்பு கணக்காக இருக்கும். அந்த வங்கியின் குறிப்பிட்ட கணக்கு வகை மற்றும் விதிமுறைகளை பொறுத்து, அந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். எனவே, 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு ஏன் வேண்டும் என்பதை வங்கியிடம் தெளிவாக கேட்டு, அந்த கணக்கின் விதிமுறைகளை பார்த்துக்கொள்ள சொல்லுங்கள்.

அதே கூட்டுறவு வங்கியில், பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், பூஜ்ஜிய இருப்பு கணக்கு துவங்க முடியுமா என்று பார்க்க சொல்லுங்கள். அந்த கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், ஏற்கனவே சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர், ஜன்தன் கணக்கு துவங்க அனுமதிக்கப்படுவரா என்றும் கேட்டுக்கொள்ள சொல்லுங்கள்.

நான் 19/05/2020 (2020 -- 21), 21/06/2023 (2023- - 24) மற்றும் 21/12/2023 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 யூனிட் தங்க பத்திரம் முதலீடு செய்தேன். இந்த பத்திரங்களை அதன் முதிர்ச்சி காலம் முடிவடையும் முன்பே திரும்ப பெற்று கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி நான் அந்த முதலீடுகளை திரும்பப்பெற வாய்ப்பு உள்ளதா? அப்படி என்றால் எவ்வளவு தொகை கிடைக்கும்?

எஸ். ரகுநாதன், மின்னஞ்சல்


நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதிகள் மட்டும் போதாது. நீங்கள் முதலீடு செய்துள்ள ஒவ்வொரு தங்கப்பத்திரமும் எந்த சீரிஸ், அதன் 'இஷ்யூ டேட்' என்ன என்பதை தெரிவித்தால் மட்டுமே, தற்போது எந்த பத்திரத்தை திரும்பப் பெற முடியும் என்பதை துல்லியமாக சொல்ல முடியும்.

மேலும், தங்கப்பத்திரத்தை திரும்பப் பெறும்போது, நீங்கள் வாங்கிய விலையை தான் திருப்பி தருவர் என்று நினைக்கக்கூடாது. முதிர்வுக்கு முன் திரும்ப பெறும் நாளில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலையை அடிப்படையாக கொண்டே தொகை கணக்கிடப்படும். எனவே, இப்போதே எவ்வளவு தொகை கிடைக்கும் என்று துல்லியமாக சொல்ல முடியாது.

என் மகளது கல்விக்கடனை முழுமையாக திருப்பி செலுத்த சென்றேன். வங்கி அதிகாரி, மொத்த பணத்தையும் செலுத்த வேண்டாம். அது உங்களுடைய மற்றும் உங்கள் மகளுடைய கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏற்படுத்தும். மெல்ல மெல்ல அடையுங்கள் என்று சொல்கிறார். அப்படி ஆகுமா என்ன?

கே. ரமேஷ், ஓசூர்


ஆகாது. அந்த வங்கி அதிகாரி ஏன் அப்படி சொன்னார் என்று விளங்கவில்லை. உண்மையில், நீங்கள் மொத்த கல்விக்கடனையும் திருப்பி செலுத்தி, கடன் கணக்கை 'குளோஸ்டு' என்று சான்றிதழ் வாங்கினால் போதும். அந்த விபரத்தை தான் அந்த வங்கி, கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும். அவர்கள் இதனை நேர்மறையாகவே எடுத்துக்கொள்வர். எந்த வகையிலும், அது உங்களுடைய அல்லது உங்களுடைய மகளுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

Advertisement