அரசு பள்ளி நுழைவாயில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பொறியால் அச்சம்

ப.வேலுார்:அரசு நடுநிலைப்பள்ளி நுழைவாயில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் வெடி சத்தத்துடன் ஏற்படும் தீப்பொறியால், மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
ப.வேலுார், நல்லியாம்பாளையம் புதுாரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 102 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி நுழைவாயில் அருகே இருந்த மின்மாற்றியில் திடீரென வெடி சத்தத்துடன், கடந்த, 3 காலை, 8:30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. அதிலிருந்து சிதறிய தீப்பொறி, அங்கிருந்த காய்ந்த செடிகளின் மீது விழுந்து தீப்பற்றியது. உடனடியாக, பொதுமக்கள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். அருகில் இருந்தவர்கள், செடிகள் மீது பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விபத்து நடந்ததால் மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டு, 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த, தி.மு.க.,வை சேர்ந்த, 4வது வார்டு கவுன்சிலர் ராமசாமி, பெற்றோர்களை சமாதானப்படுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, கவுன்சிலர் ராமசாமி கூறுகையில், ''பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இப்பள்ளி முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ட்ரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement