நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் இழுபறி லஞ்சம் பெற முடியாததால் அதிகாரிகள் மெத்தனம்

கோபி:கோபி அருகே தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில், ஒரு வாரமாக நெல் அறுவடை தீவிரமாக நடக்கிறது. இரு பாசனங்களிலும், செப்.,1 முதல், 39 கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.

பல இடங்களில் கொள்முதல் நிலையம் துவங்கினாலும், கொள்முதல் பணி இன்னும் துவங்கவில்லை. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல்லை குவித்து, அதை பாதுகாக்க விடியவிடிய தவம் கிடக்கின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நெல் கொள்முதலுக்கு முன்பு மூட்டைக்கு, 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை லஞ்சம் வாங்கினர். தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு லஞ்சம் வாங்க கூடாது என்ற உத்தரவால், கொள்முதல் நிலையங்களில் எடை போடுவது முதல் மின்கட்டணம் செலுத்தும் செலவை, சமாளிப்பதில் அத்துறையினருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பில்லிங் மெஷின் வராததால் எடைபோட வழியில்லை. மழைக்காலமாக இருப்பதால் நெல் குவியலுக்குள் மழைநீர் புகாத வகையில் தார்பாய் கொண்டு பாதுகாப்பு செய்து, இரவு-பகலாக காவல் காக்கும் நிலை உள்ளது. கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்லால், அறுவடை பணியை விவசாயிகள் பல இடங்களில் நிறுத்தியுள்ளனர். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மோகனிடம் கேட்டதற்கு, 'நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க, 39 இடங்களுக்கு அனுமதி வாங்கியதில், 24 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. பில்லிங் மெஷின் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தீவிரமடையும். இதுவரை, 500 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement