சகலையை வெட்டிய கட்டட தொழிலாளி

ஈரோடு:அந்தியூர் பூதப்பாடி வாய்க்கால்மேடு ராஜிவ் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம், 37. கட்டட தொழிலாளி. இவர் மனைவி சுமித்ரா. ஈரோடு மணல்மேட்டில் சுமித்ராவின் தாய் வீடு உள்ளது.

சுமித்ராவுக்கு உடல் நிலை சரியில்லாததால் தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெறுகிறார். நேற்று முன் தினம் மகாலிங்கம் மனைவியை பார்க்க ஈரோடு வந்தார். சுமித்ராவின் சகோதரி மேகலா, உறவினர் அஜித்குமார் மணல்மேடு வீட்டில் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த மேகலாவின் மகன் விஷ்ணு, தாயிடம் சீட்டு விளையாட கூடாது என்று கூறியுள்ளார். அங்கிருந்த மகாலிங்கம், சீட்டு கட்டு உன் தந்தை வாங்கி தரவில்லை என விஷ்ணுவை திட்டியுள்ளார்.இதுபற்றி விஷ்ணு தன் தந்தை கட்டட தொழிலாளியான மாதப்பனுக்கு, 45, போனில் தெரிவித்துள்ளார். மாதப்பன் அங்கு வந்து மகாலிங்கத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. மாதப்பன் அரிவாளால் மகாலிங்கத்தின் வலது மணிக்கட்டு முன் பகுதியில் வெட்டினார். அவரது புகாரின் பேரில் மாதப்பனை, சூரம்பட்டி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement