இறுதி கட்டத்தை எட்டியுள்ள புகழூர் கதவணை பணி

கரூர்:கரூர் அருகே, காவிரியாற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் கதவணை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


கரூர் மாவட்டம், புகழூரில் காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 406.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கரூர் நஞ்சை புகழூர், நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு, நபார்டு வங்கி நிதியுதவி அளித்தது.
கடந்த, 2020 நவ., மாதம் கதவணை கட்டும் பணியை, சென்னையில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய
கதவணை, 1,056 மீட்டர் நீளத்தில், 73 ஷட்டர்கள் அமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து
விட்டது. அதில், 0.8 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். புதிய கதவணையில் இருந்து வினாடிக்கு, மூன்று லட்சத்து, 60,000 கன அடி தண்ணீர் வெளியேற்ற முடியும்.

தற்போது, புதிய கதவணையில் கரூர் புகழூர் - நாமக்கல் அனிச்சம்பாளையம் பகுதிகளை இணைக்கும் வகையில், தார்சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடைந்தது. இதை தவிர, கதவணையை கண்காணிக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு, அலுவலகம் கட்டும் பணிகளும், தண்ணீரை அளவீடு செய்யும் அறை பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், கதவணை கட்டும் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

புதிய கதவணை பணிகள் நிறைவு பெறும்போது, வலதுபுற வாங்கல் வாய்க்கால் மூலம், 1,458 ஏக்கர் பாசன நிலங்களும், இடதுபுற மோகனுார் வாய்க்கால் மூலம், 2,583 ஏக்கர் பாசன நிலங்களும் பாசன வசதியை பெற உள்ளது. புதிய கதவணை மூலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களில், குடிநீர் ஆதாரம் கிடைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புகழூர் காவிரியாற்றில் கதவணை கட்டும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement