குட்டையில் விழுந்து சிறுவன் பலி

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே பாறை சுனையில் (குட்டையில்) சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், 43; அரகண்டநல்லுாரில் தங்கி இஸ்மாயில், 46; என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிந்தார்.

குடும்ப பிரச்சனை காரணமாக 5ம் வகுப்பு படிக்கும் தனது மகன் முருகவேல், 10; முனியப்பன், 8; ஆகியோரும் தந்தை தர்மலிங்கத்துடன் தங்கியிருந்தனர்.

நேற்று மதியம் கொல்லுார் கிராமத்தில் மகன்களுடன் தர்மலிங்கம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திரும்பும்போது கல்லாங்குத்து பகுதியில் உள்ள தண்ணீர் நிறைந்த திருடன் கோவில் பாறை சுனையில் (குட்டையில்) முருகவேல் மூழ்கியது தெரியவந்தது.

உடன் முருகவேலை மீட்டு திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகவேலை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முருகவேல் இறந்ததாக தெரிவித்தனர்.

அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement