ஒலிம்பிக் பவனாகிறது நேரு ஸ்டேடியம் சுற்றிய இடத்தை கையகப்படுத்த முயற்சி

சென்னன, ஆக. 5 –

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கை, சர்வதேச தரத்திலான ஒலிம்பிக் பவனாக மாற்ற, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரங்கைச் சுற்றியுள்ள மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை நாட்டின் முன்னணி விளையாட்டு மாநிலமாக மாற்றும் வகையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீரர், வீராங்கனையரின் திறன் மேம்பாடு, மாவட்டங்கள்தோறும் முதல்வர் விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல், விளையாட்டு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கை ஒலிம்பிக் பவனாக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், ‘நேரு விளையாட்டு அரங்கை ஒலிம்பிக் பவனாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கடந்த மாதம் உறுதி அளித்திருந்தார்.

இதற்கிடையில், கடந்த ஆட்சியில் சென்னை செம்மஞ்சேரியில், 127 ஏக்கர் பரப்பளவில் ‘குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேரு விளையாட்டு அரங்கை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் அருகில் உள்ள கண்ணப்பர் திடல், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரங்கைச் சுற்றியுள்ள மாநகராட்சி மற்றும் பிற அரசு நிலங்கள், காலி இடங்கள் உள்ளிட்டவற்றை கையகப்படுத்த மாநகராட்சியுடன் பேச்சு நடந்து வருகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நேரு விளையாட்டு அரங்கை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அரங்கைச் சுற்றியுள்ள இடங்களை ஆணையம் வசப்படுத்த, மாநகராட்சியுடன் பேச்சு நடந்து வருகிறது. கண்ணப்பர் திடல் எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. சுற்றியுள்ள இடங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்கின்றன’ என்றார்.

***

Advertisement