தி.மு.க.,வை ஓட ஓட விரட்டுகிறார் முதல்வர் விஜய்: பா.ஜ., தமிழிசை பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பாராட்டு

6

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த திருமண விழாவுக்கு வந்த பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை, ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து நேற்று ஆசி பெற்றார்.

பின் அவர் அளித்த பேட்டி:

முதல்வர் விஜய், தி.மு.க., செய்த ஊழல்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி, அவர்களை ஓட ஓட விரட்டி வருகிறார். வீராணம் முதல் விஞ்ஞான ஊழல் வரை ஊழலில் வளர்ந்தது தி.மு.க., ஊழல் குறித்து பேசினால் ஆதாரம் கேட்போருக்கு, தற்போது ஆதாரத்துடன் முதல்வர் விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

இனி ஊழல் செய்தால் அது ஒரு நாள் வெளிப்படுத்தப்படும் என்பதை இளைஞர்கள் மத்தியில் பாடமாக புகட்டியுள்ளார்.

த.வெ.க.,வுடன் எனக்கு மாற்றுக் கருத்தும், கொள்கை முரண்பாடும் இருந்தபோதிலும் ஊழல் விவகாரங்களை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கு பாராட்டுகள். அதே நேரத்தில் காவல்துறையை பயன்படுத்தி சட்டம்- ஒழுங்கை அரசு முறையாக கையாள வேண்டும்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், தி.மு.க.,வினர் வெளியேற முடியாமல் அங்கேயே தர்ணாவில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஊழலில் ஊறிய காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க., கூட்டணி வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement