ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தேனி:மர்ம நபர்கள் அனுப்பும் ஸ்கிரீன் ஷேரிங் (அலைபேசி, கணினி திரை பகிரும்) செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. பகுதிநேர வேலை, ஆன்லைன் டெலிவரி, டிஜிட்டல் கைது, முதலீட்டு லாபம், உதவித்தொகை என கூறி சைபர் கும்பல் மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்தால் பணம் வரும் என்றால் நம்பி ஏமாற வேண்டாம் என தேனி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: மாவட்டத்தில் கியூ.ஆர்.கோடு வை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும் என கூறி மோசடிகள் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மர்மநபர்கள் கொடுக்கும் கியூ.ஆர்.கோடுவை ஸ்கேன் செய்ய கூடாது. மேலும் அலைபேசி, கணினிகளின் ஸ்கிரீன்களை யாருக்கும் பகிர கூடாது. டீம் வீவர், எனி டெஸ்க், குயிக் சப்போர்ட் போன்ற ஸ்கிரீன் பகிர்வு செயலிகளை மர்மநபர்கள் கொடுக்கும் லிங்குகளை கொண்டு பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் வங்கி கணக்கு, ஓ.டி.பி. உள்ளிட்ட ரகசிய விவரங்கள் திருடப்பட்டு பணமோசடிக்கு ஆளாவீர்கள் என எச்சரித்தனர்.