முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்:பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026 ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் செப்.,7 முதல் அக்.,5 வரை நடக்கிறது. இதில், பல்வேறு பிரிவுகளில் விளையாடுவதற்காக 47,098 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகும். மாவட்ட அளவிலான போட்டிகள் செப்.,7 ல் துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் முதல் ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கோ-கோ போட்டிகளில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் செப்.,7 முதல் அக்.,3 வரையிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் செப்.,7 முதல் செப்.,22 வரையிலும் நடக்கின்றன.
அரசுப் பணியாளர்களுக்கான போட்டிகள் செப்.,25 ம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு அக்.,1லும், பொதுப்பிரிவுக்கான போட்டிகள் அக்..19, 21, 25 ஆகிய தினங்களிலும் நடக்கவுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான போட்டிகள் மதுரையில் நடக்கவுள்ளன. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தான் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இன்று(செப்.,9) கலெக்டர் அலுவலக ெஹலிபேடு அருகே தடகளப்போட்டிகள் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் தினேஷ்குமார் கூறுகையில், பள்ளி மாணவர்கள் 25,799, கல்லுாரி மாணவர்கள்-14,403 பேர், மாற்றுத்திறனாளிகள் 586, அரசு ஊழியர்கள் 1712, பொதுமக்கள் 4603 என 47,098 பேர் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம், 2025ல் 23 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைப்பேசி எண் 04567--230 238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.----