தேங்காய் சிரட்டை விலை தொடர் உயர்வு அரசு உதவி கேட்கும் ஏற்றுமதியாளர்கள்: கார்பன் பொருள் ஏற்றுமதி சந்தை ரூ.4,700 கோடி

புதுடில்லி: தேங்காய் சிரட்டையின் விலை தொடர் உயர்வு மற்றும் சீன நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க, மத்திய அரசு உதவ வேண்டும் என, ஆக்டிவேட்டட் கார்பன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்த சங்கம் தெரிவித்துள்ளதாவது:

தென் மாநிலங்களில் தேங்காய் சிரட்டையின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருவதால், அதிலிருந்து கரி தயாரிக்கும் செலவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் போட்டியிடுவது கடினமாகியுள்ளது.

சீன உற்பத்தியாளர்கள் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து முழு தேங்காயை கொள்முதல் செய்து, அவற்றின் சிரட்டையில் இருந்து ஆக்டிவேட்டட் கார்பன் தயாரித்து ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வது இந்திய நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், விலை ஒழுங்கமைப்பை உருவாக்க தேங்காய் ஓடு, கரி ஆகியவற்றை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளை அணுக உள்ளோம்.

அத்துடன், அமெரிக்காவில் நிலவும் வரி தொடர்பான பிரச்னைகள், மேற்கு ஆசிய பதற்றம், ஏற்றுமதிக்கான கன்டெய்னர்கள் மற்றும் கப்பல்கள் கிடைப்பதில் சிக்கல் என பிரச்னைகள் நீள்கின்றன. எனவே, இவற்றிற்கு தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் சிரட்டைக்கு செப்டம்பர் மாத விலை கிலோ 105 -- 107 ரூபாயாகவும், அக்டோபர் மாத விலை 98 - 100 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisement