இந்திய இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது அவசியம்; பிரதமர் மோடி
ஆமதாபாத்: இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது மிகவும் அவசியமாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.35,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும், துவக்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2014க்குப் பிறகு இந்தியா 50,000 நவீன ரயில் பெட்டிகளை உருவாக்கியுள்ளது; ஆனால் முந்தைய ஆட்சியால் 10 ஆண்டுகளில் 50,000 கழிப்பறைகளைக் கூட கட்ட முடியவில்லை; 'சிப்' முதல் கப்பல்கள் வரை, இந்தியா இப்போது உற்பத்தித் துறையில் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது.
இணையவழிப் பயிற்சி
எங்களது ஆட்சியில் ரயில்வே பணிகள் துரிதமாக நடந்து வருவதால் வளர்ச்சி அடைந்த பாரதத்தை காண முடிகிறது. காங்., கூட்டணி ஆட்சியில் சரக்கு ரயில்வே பாதைகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது சரக்கு ரயில்பாதை, சாலைகள், விரிவாக்கம் பணி செய்து வருவதால் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.
பொய்களை பரப்பி மக்கள் உங்களை திசைதிருப்ப முயல்வார்கள், ஆனால் இளைஞர்கள் உண்மையின் பக்கம் நிற்பார்கள். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்குச் செலவிடப்படும் பணத்தை மிச்சப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி அளிக்கப்படும்.
மிகவும் அவசியம்
இந்திய இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவது மிகவும் அவசியமாகும் . நமது இளம் தலைமுறையினர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டவர்களுக்கான தேவை; தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை; இத்திறன் கொண்ட ஒருவர் விவசாயத் துறைக்கான புதிய தீர்வுகளை உருவாக்கலாம். சுகாதாரத் துறைக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தலாம். உற்பத்தித் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.
உயிர்நாடி
ரோபோட்டிக்ஸ் (இயந்திரவியல்) துறையில் ஒரு புதிய ஸ்டார்ட் அப் துவங்கலாம். எனவே, உள்நாட்டிலும் உலக அளவிலும் உள்ள பல்வேறு துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவைப் புரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தக்கூடிய இளைஞர்கள் நமக்குத் தேவை.
இதற்காக அரசு ஒரு முக்கிய முன்னெடுப்பைத் துவங்கி உள்ளது. பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் உயிர்நாடியாகத் திகழ்கின்றன. இந்த நவீன சரக்கு போக்குவரத்து கட்டமைப்பால் இந்தியாவின் மாற்றம் துரிதமடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மேலும்
-
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் ரூ.59 லட்சம் வர்த்தகம்
-
கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
-
நாளை (செப். 10) மின்தடை
-
விபத்தில் வாலிபர் பலி
-
ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்பங்கேற்க ராமநாதபுரத்தில் 47,098 பேர் பதிவு