பரமக்குடியில் விநாயகர் சிலை செய்து அசத்தும் பட்டதாரி: கை கொடுத்த கலை ஆர்வம்

பரமக்குடி: பரமக்குடியில் நெசவுத் தொழிலாளியின் மகன் இளநிலை பட்டம் பெற்ற நிலையில் கலை ஆர்வத்தால் விநாயகர் சிலைகளை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.

பரமக்குடி சுந்தர்நகரை சேர்ந்தவர் கணேஷ் 21. பரமக்குடி அரசு கல்லுாரியில் பி.பி.ஏ., பட்டம் பெற்றவர். இவரது தந்தை நெசவுத்தொழில் செய்து வரும் நிலையில் பூ வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். தந்தைக்கு உறுதுணையாக இருந்து வந்த கணேஷ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் பூஜை செய்வதற்காக விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தொடர்ந்து அந்த ஆண்டு சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாத சூழலில், மற்ற விழாக் குழுவினர் கேட்டதால் விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது 5வது ஆண்டாக 10 விநாயகர் சிலைகளை செய்து அசத்தியுள்ளார். இவற்றை மூங்கில் குச்சிகள், நாளிதழ் தாள், கிழங்கு மாவு, சாக் பவுடர் மற்றும் இயற்கையை பாதிக்காத வர்ணங்கள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செய்து வருகிறார்.

இதன்படி 3 அடி முதல் 7 அடி வரை சிலைகளை செய்து ரூ.4000 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்து வருகிறார். ஒவ்வொன்றையும் தயார் செய்ய 10 நாட்கள் வரை ஆகிறது. மேலும் விநாயகர் சிலைகளுக்கான அனைத்து அச்சு வடிவங்களையும் கற்பனை திறத்தால் தயார் செய்து வைத்துள்ளார்.

இந்த வருமானத்தில் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதுடன் சுய தொழிலுக்கும் வித்திட்டுள்ளார். மேலும் கோயில் விழாக்களுக்கு தேவையான வாகனங்களையும் செய்து தர முடியும் என கணேஷ் தெரிவித்தார்.

--

Advertisement