நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி விவசாயிகள் மறியல்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில், இந்த ஆண்டு ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், 110 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மிகக் குறைந்த இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் அறிவிப்பை நம்பி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொண்டுவந்து வைத்துள்ளனர். 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. 2 நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைகின்றன.
இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள,் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பினர் நேற்று மயிலாடுதுறை மாவட்ட நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி கோகங்களை எழுப்பினர். தாசில்தார் விஜயராகவன் மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.