303 பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் :30,683 மாணவர்கள் பயனடைவர்

தேனி:மாவட்டத்தில் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் மூலம் 303 பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 8 ம்வகுப்பு வரை படிக்கும் 30,683 மாணவர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2022 செப்.,ல் காலை உணவுத்திட்டம் துவக்கப்பட்டது. முதலில் அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக துவங்கப்பட்டது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது வரை 362 அரசுப்பள்ளி, ஊரக பகுதிகளில் உள்ள உதவி பெறும் 87 பள்ளிகள், பேரூராட்சி பகுதியில் 44 பள்ளிகள், நகராட்சி பகுதியில் 131 பள்ளிகள் என மொத்தம் 624 பள்ளிகளில் படிக்கும் 37,653 பேர் பயனடைந்து வருகின்றனர்.

இத் திட்டம் காமராஜர் காலை உணவுத்திட்டம் என பெயர் மாற்றப்பட்டு, 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. இதனால் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் 303 பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் 30,683 பேர் பயனடைவார்கள். இதில் 218 பள்ளிகளில் மகளிர் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சமைத்து மாணவர்களுக்கு உணவு வழங்க உள்ளனர். நகர்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உணவு தயாரிப்பு கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளன. இத்திட்டம் தொடர்பாக கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.

Advertisement