தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல்:சூடு பிடித்தது புதுச்சேரி அரசியல் களம்

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.,9 ல் துவங்குவதால், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., பா.ஜ., அ.தி.மு.க., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, தனது சொந்தக் கோட்டையான தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் விதிமுறைகளின்படி, இரு தொகுதிகளில் வென்றவர் ஒரு பதவியை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ., பதவியை மே 17ம் தேதி அன்று அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, காலியாக உள்ள இத்தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அட்டவணையை செப்., 7அன்று அறிவித்தது. மாநில அரசிதழலில் 9ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் சூழலில், இன்றைய தினமே வேட்புமனுத் தாக்கலும் தொடங்குகிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் முன்னிலையில் வரும் 16ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 17ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 19ம் தேதி வரை திரும்பப்பெற அவகாசம் அளிக்கப்படுகிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், அக்., 6ம் தேதி ஓட்டுப்பதிவும், அக்., 11ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகளும் வெளியாகவுள்ளன. இந்த தேர்தல் அறிவிப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையே முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளின்படி ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே, அதாவது அக்., 4 மாலை 5:00 மணியுடன் பிரசாரம் ஓய்வடைய வேண்டும்.

அப்படி பார்த்தால் மொத்த தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் நடைமுறைக்கே 26 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், வேட்புமனுக்கள் இறுதியான பிறகு வேட்பாளர்கள் நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்ய வெறும் 16 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

இதனால், சட்டசபை தேர்தல் போன்று ஜவ்வாக கூட்டணி பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டு இருக்க அரசியல் கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் கிடையாது. நீண்ட நாட்கள் யோசிக்காமல் மக்கள் மத்தியில் ஏற்கனவே பரிச்சயமான மற்றும் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அனைத்துக் கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் என்.ஆர்.காங்., நேயம் மக்கள் கழகம் முன்கூட்டியே களம் இறங்கிவிட்டன. முதல்வரின் சொந்தக் கோட்டையைக் தக்கவைத்துக்கொள்வது ஆளுங்கட்டணிக்குக் கவுரவப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

அதேவேளையில், இந்த குறுகிய கால அவகாசத்தைச் சாதகமாக்கிக் கொண்டு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து தொகுதியைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளும் தீவிர உத்திகளை வகுத்து வருவதால், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது.

டிபாசிட் எவ்வளவு சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிபாசிட் செலுத்த வேண்டும். பொது பிரிவு வேட்பாளர்கள் 1,000 ரூபாய், எஸ்சி.,எஸ்.டி., பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தேர்தல் முடிவுகளில் டிபாசிட் பெறத் தவறினால் இந்தத் தொகை திருப்பி தரப்பட மாட்டாது. தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் நிலவிய பலமுனைப் போட்டிகளுக்கு இடையே, ரங்கசாமி மொத்தம் 10,024 ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவரை எதிர்த்து களம் கண்ட நேயம் மக்கள் கட்சி வேட்பாளரான விநாயகம் 5,583 ஓட்டுகளை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ரங்கசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 4,441 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement