என்.சி.சி., துணை தலைமை இயக்குநர் புதுச்சேரியில் நிர்வாக ஆய்வு

புதுச்சேரி: என்.சி.சி., தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் துணை தலைமை இயக்குநர் சுதீப் நம்பியாத், என்.சி.சி., குழும புதுச்சேரி தலைமையகத்தில் நிர்வாக ஆய்வு மேற்கொண்டு, குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

குழும தலைமையகத்திற்கு வந்த துணை தலைமை இயக்குநருக்கு என்.சி.சி., மாணவர் படையினரால் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

புதுச்சேரியின் குழும தளபதி ஆஷிஷ் திவாரி, குழுமத்தின் செயல்பாடுகள், சாதனைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்து நிர்வாக விளக்கக்காட்சி வழங்கினார். துணை தலைமை இயக்குநர் சுதீப் நம்பியாத், எஸ்.எஸ்.பி., தேர்வுக்குத் தயாராகும் மாணவர் படையினருடன் கலந்துரையாடினார்.

அதில், இலக்கை அடைவதற்கு அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படுமாறு ஊக்குவித்தார். மேலும், ஆளுமை மேம்பாடு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்காக என்.சி.சி., வழங்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

பின், கடற்படை பிரிவை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும், என்.சி.சி., புதுச்சேரி பயிற்சிப் பகுதியில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் பயிற்சி உள்கட்டமைப்பு குறித்து கேட்டறிந்தார். இதில், சிறப்பாக செயல்பட்ட என்.சி.சி., மாணவர் படையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிர்வாக ஆய்வு, என்.சி.சி., குழுமம் புதுச்சேரியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கும், தரமான பயிற்சி, தலைமைத்துவ மேம்பாடு மற்றும் என்.சி.சி., மாணவர் படையினரின் ஒட்டுமொத்த முன்னேற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Advertisement