அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அசல் கோப்புகள் மாயமான விவகாரம்; விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: 'அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் கோப்புகள் காணாமல் போனது குறித்தும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்தும், கோவை மாவட்ட கலெக்டர் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பட்டணம் கிராமத்தில் வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டத்துக்காக, 1974ல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, 1978ம் ஆண்டு இழப்பீடு வழங்கப்பட்டது. ராமசாமி கோனார், அவரது சகோதரர் காளிமுத்து கோனாருக்கு சொந்தமான, 4.06 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், 'கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பகுதி மட்டுமே சாலைக்கு பயன்படுத்தப்பட்டது; மீதிமுள்ள நிலம் ராமசாமி கோனாரின் வசமே இருந்தது; அதை அவர் 2018ல் உயில் வாயிலாக, எனக்கு எழுதி வைத்துள்ளார். எனவே, புதிய நில எடுப்பு சட்டத்தின் கீழ், நில எடுப்பு காலாவதியாகி விட்டது' என கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2020ல் நாகராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு தொடர்ந்த நாகராஜ் மறைவுக்கு பின், அவர்களின் வாரிசுகள் வழக்கை நடத்தினர். 'ஏ-' -பதிவேடு எனும் நிலத்தின் வருவாய் ஆவணங்களை சமர்ப்பித்து, உரிமை கோரினர். அதற்கு அரசு தரப்பில் எதிர்க்க முயற்சித்தபோது, 2021ல் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் கோப்புகள் திடீரென காணாமல் போயின.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'அசல் ஆவணங்கள் இல்லாததால், அந்த நிலம் தேவைப்படுகிறதா என, அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். இல்லையெனில் நிலத்தை விடுவிக்கலாம்' என, 2025ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன அசல் கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் உரிமை கோருபவர்கள் தாக்கல் செய்த 'ஏ' பதிவேடு திருத்தப்பட்ட போலி ஆவணம் என்பது தெளிவாகிறது. அரசு தாக்கல் செய்த 1978ம் ஆண்டின் ஏ பதிவேடுகள் வாயிலாக, ராமசாமி கோனார், இழப்பீடு தொகையை காசோலை வாயிலாக பெற்றுக்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, தனி நீதிபதி, 2025ம் ஆண்டு அக்., 27ல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் அசல் ஆவணங்கள் காணாமல் போனது குறித்தும், போலியான 'ஏ' பதிவேடு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்தும், கோவை மாவட்ட கலெக்டர் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணை முடிவில், ஆவணங்களை போலியாக உருவாக்கியவர்கள் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் பலி
-
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை'
-
தகராறில் மாமனாரை வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகனுக்கு 'வலை'
-
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி விவசாயிகள் மறியல்
-
மாட்டின் வாலை வெட்டி மாந்த்ரீக பூஜை: மனநலம் பாதித்த நபரை மீட்ட போலீசார்
-
நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்