வடகிழக்கு பருவமழை பாதிப்பை தவிர்க்க ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தல்  

கடலுார்:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் துறைகளின் தயார்நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, எஸ்.பி., விவேகானந்த சுக்லா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், அனைத்து அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக, புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு பாதுகாப்பு மையம், தற்காலிக நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சரிந்தால் உடனடியாகச் சீரமைக்க மின்துறையும், மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அகற்றத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையும் ஜே.சி.பி இயந்திரங்கள், ரப்பர் படகுகள், மற்றும் பிற உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினார்.

Advertisement