போஸ்டர் செய்தி மோசடியின்போது நழுவிய மர்ம பெண்கள் யார் தீவிர விசாரணையை துவக்கிய சி.பி.சி.ஐ.டி.,

புதுச்சேரி: தொழிலதிபரிடம் மோசடி நடந்தபோது சாமர்த்தியமாக நழுவிய மர்ம பெண்கள் குறித்த தீவிர விசாரணையை சி.பி.ஐ.டி., போலீசார் துவக்கியுள்ளனர்.

மூன்று மணி நேரத்தில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி லாஸ்பேட்டை தொழிலதிபர் வெங்கடேஷிடம் ரூ.2 கோடி வாங்கி, அதில் ரூ.88 லட்சத்தை மோசடி செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., காவல்துறை விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் முதன்மை குற்றவாளி முகமது ரபீக் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த மோசடியின் மையப்புள்ளியாக இருக்கும் மர்மப் பெண்களை கைது செய்ய காவல்துறை தீவிர வேட்டையில் இறங்கியுள்ளது.

இவ்வழக்கின் மிக முக்கிய முடிச்சாக இருப்பது மோசடி நடந்த இடத்தில் இருந்த இந்த மர்மப் பெண்கள்தான். டி.ஆர். நகரில் வைத்து வெங்கடேஷ் ரூ.2 கோடி பணத்தைக் கொடுத்தபோது, முக்கிய குற்றவாளி முகமது ரபீக், பணத்தை இந்த பெண்களிடம் கொடுங்கள், இவர்கள் வேலையை முடித்துத் தருவார்கள் என்று கூறி அவர்களைக் காட்டியுள்ளார்.

தை நம்பி வெங்கடேஷும் 2 கோடி பணத்தை அந்தப் பெண்களிடம் தான் ஒப்படைத்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண்கள், சிறிதும் பதற்றமின்றி, மதியம் சாப்பிட்டுவிட்டு வருகிறோம் என்று கூறிவிட்டு மிக இயல்பாக அங்கிருந்து நழுவியுள்ளனர்.

சாப்பிட்டு வருவதாகக் கூறிச் சென்ற பெண்கள் மீண்டும் திரும்பவே இல்லை. அவர்கள் பணத்துடன் சாமர்த்தியமாகத் தப்பியது தெரிந்த பிறகே, அங்கே எஞ்சியிருந்த கும்பல் மீதிப் பணத்துடன் தப்பிக்க முயன்றதும், அதில் ரூ. 88 லட்சம் பறிபோனதும் தெரியவந்தது.

யார் அந்தப் பெண்கள்.. பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற பெண்கள் சாதாரணக் காய்களா அல்லது இந்த பெரிய மோசடி நெட்வொர்க்கின் முக்கியச் சூத்திரதாரிகளா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

போலீசாரின் சந்தேகத்தைத் தவிர்க்கவே பெண்களைப் பயன்படுத்திப் பணத்தைக் கைமாற்றியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., முடிவு செய்துள்ளது. அப்பெண்கள் பற்றிய முழுமையான விவரங்கள் இந்த 8 பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதால், அவர்களிடம் நடத்தும் தீவிர விசாரணையில் மர்மப் பெண்களின் அடையாளம் தெரியவரும்.

பணத்துடன் மாயமான அந்த மர்மப் பெண்கள் பிடிபட்டால் மட்டுமே, தலைமறைவாக உள்ள மீதி ரூ.49 லட்சம் பணம் மற்றும் இந்த சர்வதேச மோசடிக் கும்பலின் முழுப் பின்னணியும் வெளிச்சத்திற்கு வரும் என்பதால், சி.பி.சி.ஐ.டி. தனிப்படையினர் அப்பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement