முதல்வரே... ஒரு நிமிஷம்; இந்த அநீதிக்கு வயது ஐந்து

6

செய்தி: மின்சாரம் தாக்கி பெண் கட்டுமான தொழிலாளி பலி; ஆதரவு இல்லாது மூன்று பிள்ளைகள் தவிப்பு!

அநீதி: 'நிவாரண நிதி' அளிக்காது ஐந்தாண்டு களாக அலைக்கழிக்கும் கட்டுமான தொழிலாளர் நலவாரியம்

முதல்வரே... புதுக்கோட்டை, காமராஜபுரம் குடிசை வீட்டில் வாழ்ந்த நிலையிலும், தன் கடின உழைப்பால் தன் மூன்று பிள்ளைகளை உயர்கல்வி எட்ட வைத்தவர் என் அம்மா நாக ஜோதி. திருவையாறு அரசு இசைக்கல்லுாரியில் இளநிலை பட்டம் முடித்திருக்கும் நான் அவரது இளைய மகள் யோகேஸ்வரி.

'டாஸ்மாக்' கோரப்பிடியில் சிக்கிய அப்பா 2018ல் காலமாக, என் அம்மா எங்களின் தந்தை ஆனார். 'கொரோனா' காலத்து ஊரடங்கின் போது, மே 8, 2021ல் கட்டட வேலைக்கு சென்றிருந்த நிலையில், உயர் மின்அழுத்த கம்பி அவரை காவு வாங்கி விட்டது. கணேஷ் நகர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர்., எண்: 245ன் கீழ் வழக்கும் பதிவானது!

அன்று இறுதிச்சடங்கு வரை எங்களுடன் மா.கம்யூ., கட்சி நின்றது. தி.மு.க., எம்.எல்.ஏ., முத்துராஜா வீடு தேடி வந்து ஆறுதல் சொன்னார். 'நலவாரியத்தின் நிவாரண தொகை, மின்வாரிய அலட்சியத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' கேட்டு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

'தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம்' தந்த பதிவு எண்: 21MZDR109307 குறிப்பிட்டு, 'தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள்' விபத்து அறிவிப்பு படிவத்தில், 'பணியிடத்து விபத்து மரணம்' குறித்த தகவல்கள் நிரப்பி, தேவையான ஆவணங்கள் இணைத்து, புதுக்கோட்டை, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) சமர்ப்பித் தோம்; எந்த ஒரு தகவலுமின்றி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன!

'மாற்றம்' தருவதற்கு முனையும் நீங்களாவது எங்களுக்கு 'நிவாரணம்' தருவீர்களா?

Advertisement