துாய்மைப்பணியாளர்களுக்கு சமூகநீதி விடுதி சமையலர்களாக பதவி உயர்வு: பணிப்பளு குறையுமென காப்பாளர்கள் மகிழ்ச்சி

மதுரை: சமூக நீதி விடுதிகளில் துாய்மைப்பணியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு அளித்ததன் மூலம் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக காப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழக சமூகநீதித்துறையின் கீழ் பி.சி.., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களின் மேம்பாட்டுக்காக சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இலவசமாக இங்கு தங்கிப் பயில்கின்றனர். மாநில அளவில் 1181 பள்ளி விடுதிகள், 195 கல்லுாரி, ஐ.டி.ஐ., விடுதிகள், 120 உண்டு, உறைவிடப் பள்ளிகள் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளில் காப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர், காவலர், துாய்மைப் பணியாளர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வலியுறுத்தி காப்பாளர்கள், மாணவர்கள் பலரும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமையலர் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வந்துள்ளது. மாவட்டம் தோறும் விடுதிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய துாய்மைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து சமையலர்களாக நியமனம் செய்துள்ளது அரசு. இவர்கள் பணியேற்பு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தென்காசி, விருதுநகர் மாவட்டத்தினர் 30 க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்டத்திற்கு பதவி உயர்வில் செல்கின்றனர். இதேபோல பிற மாவட்டங்களிலும் செல்கின்றனர்.

காப்பாளர்கள் கூறியதாவது:

நீண்ட நாளாக சமையலர் பணியிடம் காலியாக இருந்ததால் விடுதியை நிர்வகிப்பதில் சிரமமாக இருந்தது. இதனால் மாற்று ஏற்பாடாக வெளியாட்களை வைத்து சமையல் சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கி சமாளித்தோம். இந்நிலையில் துாய்மைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி சமையலர்களாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஒரு மாவட்டத்தில் உள்ள துாய்மைப் பணியாளரை மற்றொரு மாவட்டத்தில் நியமித்துள்ளதால் அவர்கள் தங்கி இருந்து பணியாற்றுவர். இதனால் அவர்கள் இரவுக் காவலர் போலவும் பணியாற்றுவர். இதனால் எங்களின் பணிப்பளு குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது மகிழ்ச்சியே என்றனர்.

Advertisement